வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (02/01/2019)

``புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களுக்குத் துணிப்பை!” - காஞ்சிபுரம் ஆட்சியர் அசத்தல்

புத்தாண்டு வாழ்த்துக் கூற வந்த அரசு அலுவலர்களுக்குத் துணிப் பைகளை பரிசாகக் கொடுத்து அறிவுரை வழங்கினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா. இதனால் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

துணிப்பை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

தமிழகம் முழுவதும் நேற்று முதல் (ஜனவரி 1) முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள்களை உபயோகிக்கக் கூறி பொது மக்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக அறிவுரைகளும் விழிப்புஉணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. ஜனவரி 1 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க, நேற்று முதல் அரசு அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக இலைகள், கண்ணாடி டம்ளர்கள் மற்றும் துணிப்பைகள் என மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதை முதல்கட்ட வெற்றியாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று புத்தாண்டுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த அனைத்து அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ‘அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் செயல்பட்டாலே மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்’ என அறிவுரை வழங்கினார். புத்தாண்டுப் பரிசாகத் துணிப்பை கொடுத்து வாழ்த்துக் கூற வந்த அனைத்து அலுவலர்களுக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க