வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (02/01/2019)

கடைசி தொடர்பு:19:37 (02/01/2019)

மின்வாரியத் தேர்வு சர்ச்சை... உண்மையை உடைக்கும் சென்னை இளைஞர்!

"இரண்டு நாள்களாக ஏதோ மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதைப்போன்ற பிம்பத்தை உருவாக்கிச் சர்ச்சையைக் கிளப்பிவருகிறார்கள். உண்மையில், நான் டி.என்.இ.பி தேர்வைப்போலவே பல தேர்வுகளை எழுதியிருக்கிறேன்."

மின்வாரியத் தேர்வு சர்ச்சை... உண்மையை உடைக்கும் சென்னை இளைஞர்!

``தமிழ்நாடு மின்வாரியத் தேர்வுக்கான (இளநிலைப் பொறியாளர் பதவி) வினாக்கள் அனைத்தும் முன்கூட்டியே வெளியாகிவிட்டன" எனப் பெரும் சர்ச்சை வெடித்திருந்த நிலையில், ``அப்படி எந்தவிதமான தவறும் அதில் நடக்கவில்லை" என்கிறார், சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருக்கும் இளைஞர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் பொறுப்புக்கான தேர்வு, கடந்த 30-ம் தேதி நடத்தப்பட்டது. டி.என்.இ.பி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய மாநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில், அந்தத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே சட்டவிரோதமாக வெளியாகியிருப்பதாக அதுகுறித்த வாட்ஸ்அப் படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் தேர்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானோர் கடந்த 2 நாள்களாக அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கிறார்கள்.

``சம்பந்தப்பட்ட மின்வாரியத் தேர்வைப் பொறுத்தவரையில் அதில் மொத்தம் 120 வினாக்கள் கேட்கப்படும். குறிப்பாக, `தேர்வு மையத்தில் கொடுக்கப்படும் அந்த 120 வினாக்கள் அடங்கிய கையேட்டைத் தேர்வு முடிந்தவுடனேயே திரும்பவும் பெற்றுக்கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் அதற்கான விடைகளுடன் சேர்த்து ஒரு டைரியில் எழுதப்பட்டிருப்பதுபோல புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. 2 மணிநேரம் மட்டுமே நடைபெறக்கூடிய ஒரு தேர்வில், கேட்கப்படும் 120 வினாக்களையும், ஒருவரால் தேர்வு மையத்திலேயே மனப்பாடம் செய்துவிட்டு வந்து டைரியில் எழுதிவிட முடியாது. அந்த வகையில் கடந்த மின்வாரியத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் நிச்சயமாக ஏற்கெனவே வெளியாகி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனத் தங்களின் ஆதங்கத்தைப் பகிரத் தொடங்கினார்கள், இந்தத் தேர்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள்.

தமிழ்நாடு மின்வாரியத் தேர்வு

இந்தத் தருணத்தில்தான் சர்ச்சைக்குள்ளான அந்த டைரியை எழுதியிருக்கும் இளைஞரின் தொடர்பு எண் நமக்குக் கிடைத்தது. அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``இரண்டு நாள்களாக ஏதோ மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதைப்போன்ற பிம்பத்தை உருவாக்கிச் சர்ச்சையைக் கிளப்பிவருகிறார்கள். உண்மையில், நான் டி.என்.இ.பி தேர்வைப்போலவே பல தேர்வுகளை எழுதியிருக்கிறேன். எப்போதுமே தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்ததும், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களை நினைவுகூர்ந்து அதற்குண்டான பதில்களுடன் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துவிடுவேன். இது என்னுடைய பழக்கம். அதுபோலத்தான் தற்போது டி.என்.இ.பி தேர்வு முடிந்தபிறகும் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களை நினைவுபடுத்தி அதற்குண்டான விடைகளுடன் ஒரு டைரியில் எழுதி வைத்தேன். குறிப்பாக அதை நான் மட்டும் தனியொருவனாகச் செய்யவில்லை. இந்தத் தேர்வை எழுதியிருந்த சக நண்பர்கள் சிலரும் எனக்கு உதவினார்கள். பொதுவாக டி.என்.இ.பி நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் பலர் இணைந்து பல்வேறு வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றில் தமிழகம் முழுக்க டி.என்.இ.பி தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும், கருத்துகளையும் நாள்தோறும் பகிர்ந்துகொண்டு இருப்பார்கள்.

அப்படியான 2-க்கும் மேலான வாட்ஸ்அப் குரூப்களில் நானும் இணைந்திருக்கிறேன். அதில் ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் குரூப்பைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் இணைந்து தற்போதைய மின்வாரியத் தேர்வு முடிந்ததும், அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் குறித்தும், அதற்கான விடைகள் குறித்தும் கலந்துரையாடினோம். அதில் முதல் 21 வினாக்கள் எனக்கே நன்றாக நினைவில் இருந்தது. நான் அதை என்னுடைய டைரியில் விடைகளுடன் சேர்த்து எழுதிவைத்தேன். பின்னர், அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த மற்ற சில நண்பர்களும் தங்களுக்கு நினைவில் இருந்த வினாக்களை ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொண்டதால், அவற்றையும் மொத்தமாக ஒன்றிணைத்து அந்த டைரியில் சேர்த்து எழுதி, அதை போட்டோவாக எடுத்து அதே வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துகொண்டேன். அது, அந்த குரூப்பில் உள்ள நண்பர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. என்னுடைய முயற்சியை வெகுவாகவே பாராட்டினார்கள். அப்போதுதான், `இதற்கு வேண்டப்பட்ட இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்புகள் இருக்கிறதே... அதிலும் பகிர்ந்துகொண்டால் பலருக்கும் உதவியாக இருக்குமே' என்ற எண்ணத்தில், மற்றொரு வாட்ஸ்அப் குரூப்பிலும் அப்படியே அந்த போட்டோக்களைப் பகிர்ந்துவிட்டேன். ஆனால் அது நான் நினைத்ததுபோல் வரவேற்பைப் பெறவில்லை. மாறாக, ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் பலரும் என்னிடம் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். தொடர்ந்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு அழைத்து கேள்விமேல் கேள்விகளாக அடுக்கத் தொடங்கினார்கள்.

மின்வாரியத் தேர்வு

`எப்படி அனைத்துக் கேள்விகளையும் உன்னால் மனப்பாடம் செய்ய முடிந்தது?' `அது, எப்படித் தேர்வு அறையில் கொடுக்கப்பட்ட வினா கையேட்டில் உள்ளதுபோலவே அச்சுப் பிசகாமல் வரிசைப்படுத்தி எழுத முடிந்தது' என ஏகப்பட்ட விசாரிப்புகள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னால் முடிந்த வரையில் விளக்கம் அளித்தேன். நான் மட்டுமே அனைத்து வினாக்களையும் மனப்பாடம் செய்துவிட்டு வரவில்லை. 2 மணி நேரத்துக்குள் அப்படி முழுவதுமாக மனப்பாடமும் செய்துவிட முடியாது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். மற்ற சில நண்பர்களுடன் சேர்ந்துதான் வினாக்களையும் அதன் விடைகளையும் டைரியில் தொகுத்திருக்கிறேன் என விரிவாக எடுத்துக் கூறினேன். அதிலும் குறிப்பாக அச்சுப் பிசகாமல் அப்படியே இருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். அப்படியிருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை எனவும் ஆணித்தரமாகத் தெரிவித்தேன். அதில் ஒரு சிலர், என் பக்கம் உள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால், இன்னும் சிலர் என்னை நம்பாமல் சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துவிட்டனர். சிம்பிளாகக் கேட்கிறேன். வினாக்கள் தேர்வுக்கு முன்பாகவே என் கையில் கிடைத்திருந்தால், நான் ஏன் தேர்வு முடிந்ததும் அதை மற்றவர்களுடன் பகிர நினைப்பேன்? அதை யாருக்கும் தெரியாமலேயே மூடி மறைத்திருக்க முடியுமல்லவா? மற்றவர்களுக்கு உதவ நினைத்த என்னை, ஏன் இப்படியொரு சர்ச்சையில் சிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்?'' என்றார், சற்றே வேதனையுடன்.

சென்னையில் வசிக்கும் இந்த இளைஞருக்கு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் தேர்வு அறை ஒதுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தரப்பில் எந்தவித தவறுகளும் இல்லை என்பதை இவ்வளவு தீர்க்கமாக நம்மிடம் தெரிவிக்கும் அந்த இளைஞர், தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்பதையும் அதே தீர்க்கத்துடன் தெரிவித்திருக்கிறார். இது சர்ச்சையை மேலும் வலுவடையச் செய்யுமே என்றோம். "என்னை பப்ளிசிட்டி செய்ய வேண்டாம் என நினைக்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

அரசு உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்ட மற்ற நபர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும். 


டிரெண்டிங் @ விகடன்