வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:18:09 (02/01/2019)

`பேக்கிங் கவர்களால் பாதிப்பில்லையா?’ - கொதிக்கும் வணிகர்கள் #PlasticBan

ந்நியப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறி, திருப்பூரில் பிஸ்கெட், குளிர்பானம், சோப்பு உள்ளிட்ட பொருள்களை சாலையில் கொட்டித் தீ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் வணிகர் சங்கத்தினர்.

`சுதேசிப் பொருள்களையே பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாகத் தமிழகம் முழுக்க விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டின் ஆதிக்கத்தைக் கண்டிக்கும் வகையில் திருப்பூர் குமரன் சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிர்பானம், பிஸ்கெட், பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட பல்வேறு அந்நியத் தயாரிப்புப் பொருள்களை சாலையில் கொட்டியும் தீ வைத்து எரித்தும் வணிகர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

வெள்ளையன்

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் வெள்ளையன், ``பன்னாட்டு கம்பெனிகளின் மறு சுழற்சி செய்ய முடியாத பேக்கிங் கவர்களைத் தடை செய்யாமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களைத் தடை செய்திருப்பது சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்நியப் பொருள்களைத் தீக்கிரையாக்குவோம் என்று மகாத்மா காந்தி களமிறங்கிய பிறகுதான் இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தார்கள். அதற்கு முன்பே வ.உ.சிதம்பரனாரும் அந்நியப் பொருள்களைத் தீ வைத்து எரித்திருக்கிறார்.

வெள்ளையன்

ஆனால், தற்போது உள்ள மத்திய அரசு இந்தியாவில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதுபோக, அமேசான், பிளிப்கார்ட் என ஆன்லைன் வியாபாரமும் அதிகரித்தபடியே இருக்கிறது. இப்படியே சென்றால் உள்நாட்டு சில்லறை வணிகம் சீரழிந்துபோய்விடும். எனவே, அந்நியப் பொருள்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளோம். நம்முடைய வியாபாரிகள் அந்நியப் பொருள்களை விற்கக்கூடாது. அதேபோல, பொதுமக்களும் அந்நியத் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்கிற கோரிக்கையை மக்களிடத்தில் முன்வைத்து வருகிறோம். அதுகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே இந்தப் போராட்டம்" என்றார்.