வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (02/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (02/01/2019)

`தமிழக அரசு நிதி நெருக்கடிக்குக் காரணம் மத்திய அரசு’ -ஆளுநர் உரையில் குற்றச்சாட்டு

ஆளுநர் உரை

'தமிழக அரசு நிதிச்சுமையில் சிக்கித் தவிப்பதற்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய நிதியை ஒழுங்காக வழங்காமல்போனதும் ஒரு காரணம்' என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது, “பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பினால், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொருள்கள் மற்றும் சேவை வரியில் கிடைக்கவேண்டிய பங்கும், இந்த வரி விதிப்புத் திட்டத்தில் உறுதியளகிக்கபட்டவாறு, வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருவதால், மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

2-17-18 -ம்  நிதியாண்டிற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பொருள்கள் மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான வருவாயையும், 455 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையையும் 2018 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 1,305 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு  இதுவரை வழங்கவேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிச்சிக்கல் மேலும் அதிகரித்துள்ளதால், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.