வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (02/01/2019)

கடைசி தொடர்பு:20:11 (02/01/2019)

``நானா, துரைமுருகனா, டி.ஆர் பாலுவா?” - திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஸ்டாலின்

'திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் யார் என 4 -ம் தேதி தெரியும்' என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

திருவாரூர் தொகுதிக்கு, வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனால் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம்காட்டிவருகின்றன. முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி, சாகுல் ஹமீது என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. நாளை, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேட்பாளரை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, தி.மு.க-வில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினிடம் வற்புறுத்திவருவதாகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனால், திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடத்த உள்ளது தி.மு.க தலைமை.

இதற்கிடையே, இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் தொடர்பாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.              ஏ-க்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க தயாராகிவிட்டோம். இருப்பினும், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சூட்சுமம் உள்ளது" என்றார். 

ஸ்டாலின்

அப்போது, நீங்கள் திருவாரூர் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்களா என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4 -ம் தேதி மாலை தெரியும். அதுவரை பொறுங்கள்" என்றார். மேலும், ``சட்டசபையில் என்ன செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினோம். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைத்தான் ராகுல் காந்தி பேசியுள்ளார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க