வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (02/01/2019)

கடைசி தொடர்பு:21:37 (02/01/2019)

சேலம் மாநகராட்சியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு - ஒரே நாளில் 4,700 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக்

தமிழக அரசு, ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. அதை நடைமுறைப்படுத்துவதில் முதல்வரின் சொந்த மாநகராட்சியான சேலம் மாநகராட்சி முழுவீச்சில்  ஈடுபட்டுவருகிறது.  சாலையோரக் கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை சோதனையிட்டு, அங்கு இருக்கும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களைக் கைப்பற்றுவதோடு, சாலையோர கடைகளுக்கு எச்சரிக்கையும், வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்துவருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு

அதற்காக, இன்று காலையில் இருந்து மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், மண்டல மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என அனைவரும் அலுவலகத்திலிருந்து கிளம்பி, சேலம் மாநாட்சியில் உள்ள      200 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்,  பெரிய வணிக நிறுவனங்கள் என ஆய்வுகள் மேற்கொண்டு, அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல்செய்ததோடு, அபராதமும் விதித்தார்கள். சாலையோரமாகத் தள்ளுவண்டிக் கடைகளில்  இருந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பரிமுதல் செய்ததோடு, இனி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

இதுபற்றி சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதிஷ், ''இன்று சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் 243 கடைகளில் 4 ஆயிரத்து 700 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல்செய்து, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி, ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மைகொண்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனைசெய்வதைத் தடுக்க, சேலம் மாநகராட்சி சார்பாக 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால், பொதுமக்களும் வியாபாரிகளும், கடை உரிமையாளர்களும் இதற்கு ஒத்துழைப்புகொடுத்து, மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது'' என்றார்.