டெல்லியில் பிரமாண்ட போராட்டம் - தூக்குக்கயிற்றுடன் டெல்லி கிளம்பும் தமிழக விவசாயிகள் | Farmers protest in delhi, tamil farmers will also participate

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (02/01/2019)

டெல்லியில் பிரமாண்ட போராட்டம் - தூக்குக்கயிற்றுடன் டெல்லி கிளம்பும் தமிழக விவசாயிகள்

``விவசாயக் கடன்களைத்  தள்ளுபடிசெய்ய முடியாது என பிரதமர் கூறுவிட்டார்.  இனி நாங்கள் வாழ்ந்து என்ன  செய்யப்போகிறோம். அதனால், அவரின் வீட்டுக்கு முன் தூக்கு மாட்டிச் சாகப்போகிறோம்"  என்று கூறினார், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.
அய்யாக்கண்ணு
  தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், இன்று திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் நடைபெற்றது.
 
அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகள் சிக்கித்தவித்துவரும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட  விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்யக் கோரி, கடந்த சில வருடங்களாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தங்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொண்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, தற்போது தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது எனக் கூறியிருப்பதுகுறித்து விமர்சனம்செய்து பேசினார்கள்.
 
 இறுதியாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்கத்தின்  தலைவர் அய்யாக்கண்ணு, "விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது. எனவே, கடன் தள்ளுபடி இல்லை என்று பிரதமர் மோடி கூறி இருப்பதை ஏற்க முடியாது. இதுகுறித்துப் பல மாநிலங்களிலும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளோம்.
 
 விவசாய கடன் தொடர்பான கூட்டம்
அதன் தொடர்ச்சியாக, வரும் 4 -ம் தேதி, டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. 
திட்டமிட்டபடி அந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள். கடன் தள்ளுபடி இல்லை என மோடி கூறிவிட்டார்.இனி வாழ்ந்து என்ன பயன்? எனவே, நாங்கள் பிரதமர் வீட்டுக்கு முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக, தூக்குக்கயிறுடன் டெல்லி செல்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க