வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:11 (03/01/2019)

திருத்தங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - மசாலாப் பொடியை தூவிச் சென்ற திருடன்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் அப்பகுதியில் வட்டித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவி சுந்தரம்மாளுடன் நேற்று மாலை திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். இந்த நிலையில், இன்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வாசலில் மசால் பொடி தூவப்பட்டிருந்தது. இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருத்தங்கல் போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு 20 பவுன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

கோயிலுக்குச் சென்றிருந்த மாடசாமி திருட்டு குறித்த தகவலறிந்ததால் வீட்டுக்கு வந்தார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை திருத்தங்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.