`ஊருக்கே ஒளிதரும் எங்க வாழ்க்கை இருண்டு கிடக்குது’ - கொதிக்கும் மின்சார ஊழியர்கள்! | TN electricity Board contract labours protest for demanding work confirmation

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:07:16 (03/01/2019)

`ஊருக்கே ஒளிதரும் எங்க வாழ்க்கை இருண்டு கிடக்குது’ - கொதிக்கும் மின்சார ஊழியர்கள்!

கஜா புயலில் இருளில் மூழ்கிக் கிடந்த கிராமங்களுக்கு ராத்திரிப்பகலாக உழைத்து மின்சாரம் வழங்கினோம். ஆனால், எங்கள் வாழ்க்கை இருண்டுக் கிடக்கிறது என புலம்புகிறார்கள் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

மின்சார வாரிய ஊழியர்கள்

தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று, மின்கம்பத்தைச் சுமந்து வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாநிலப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாநில அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 750-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்கம்பத்தைச் சுமந்தபடி அரசுக்குக் கோரிக்கை வைத்தபடி கோஷமிட்டபடி வந்தனர். அடுத்து திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ``ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  என்றும். ஏற்கெனவே அமைச்சர் அறிவித்த 380 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும்.

மின்வாரிய தொழிலாளர்கள்

கஜா புயலில் இரவு பகலாக பணியாற்றிய நாங்கள் டெல்டா மாவட்டங்களில் இருள் நீங்க வழி செய்தோம். அதில் எங்களின் பணியைப் பார்த்த அமைச்சர் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும்  பணி செய்யும்போது விபத்துகள் ஏற்பட்டால் அனைத்து செலவுகளையும் மின்சார வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் உயிரைப் பணையம் வைத்து உழைக்கும் நாங்கள், ஆபத்தில் சிக்கிக்கொண்டால், எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. மேலும், ஊருக்கெல்லாம் விளக்கேற்றும் எங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்கள்.

நம்மிடம் பேசிய கலை, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட எங்களின் வாழ்வில் ஒளியேற்றிட பணியை நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைத்து வருகின்றோம். இந்த நிலையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வாரியத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்த பணியையும், உழைப்பையும் யாராலும் மறந்துவிடமுடியாது. எங்களின் பணியைப் பார்த்து அமைச்சர்  ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறினார்கள். அதை நிறைவேற்றித் தந்தால் எங்களின் வாழ்விலும் வெளிச்சம் வரும்" என்றார்கள்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க