வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:07:20 (03/01/2019)

`லஞ்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல்!’ - இன்ஸ்பெக்டரால் தீக்குளிக்க முயன்ற வியாபாரி

நில விவகாரத்தில் எதிர்தரப்பிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக இன்ஸ்பெக்டர் மீது அடகுக் கடை வியாபாரி புகார் கூறி தீக்குளிக்க முயன்ற சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அடகு கடை வியாபாரி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சுரேஷ் (41). ஆம்பூர் ஷராப் பஜாரில் ‘ஸ்ரீவைஷ்ணவி’ என்ற பெயரில் அடகுக் கடை வைத்துள்ளார். பெரியாங்குப்பத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் சுமார் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அவரிடமிருந்து 5 ஏக்கர் நிலத்தை, சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ் வாங்கினார். பின்னர், அந்த நிலத்தை ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அண்ணாமலையார் வீதியைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளரான பரமேஸ்வரிக்கு (60) சுரேஷ் விற்றுள்ளார்.

நிலத்தை வாங்கிய பரமேஸ்வரி, நிலத்தின் முதல் உரிமையாளரான கோவிந்தராஜிடம் பராமரித்து பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். திடீரென 5 ஏக்கர் நிலத்தையும் கோவிந்தராஜ், ஆக்கிரமித்துக்கொண்டு உரிமைக் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு லாட்ஜ் உரிமையாளர் பரமேஸ்வரி, அடகு வியாபாரி சுரேஷிடம் வற்புறுத்தியுள்ளார். மேலும் ‘உன்னிடமிருந்து தானே நிலத்தை விலைக்கு வாங்கினேன். நிலத்தை மீட்டுக் கொடு... இல்லை என் பணத்தை திருப்பிக் கொடு...’ என்று ரவுடிகளை ஏவி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம்

இதுபற்றி அடகு வியாபாரி சுரேஷ், ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார், ரவுடிகளை எச்சரித்து அனுப்பினர். இதைத்தொடர்ந்து, லாட்ஜ் உரிமையாளர் பரமேஸ்வரி, ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனுக்கு பணத்தைக் கொடுத்து அடகு வியாபாரியை மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் போன் போட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஆடியோ ரெக்கார்டுடன், அடகு வியாபாரி சுரேஷ் இன்று வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவர், தீக்குளிக்கப் போவதாக மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீஸார், பெட்ரோல் கேனை கைப்பற்றி அடகு வியாபாரியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து, வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.