வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (03/01/2019)

கடைசி தொடர்பு:10:25 (03/01/2019)

சி.பி.எம் அலுவலகம் எரிப்பு, கல்வீச்சில் கர்ம சமிதி பிரமுகர் பலி! - உச்சகட்ட பதற்றத்தில் கேரளா

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் சங்க்பரிவார் அமைப்புகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றன. சி.பி.எம். அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. கல்வீச்சில் சபரிமலை கர்ம சமிதி பிரமுகர் பலியானதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பந்த்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகியோர் நேற்று அதிகாலை சபரிமலை சந்நிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். 45 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் சந்நிதானத்துக்குச் சென்றதால் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க. நேற்று முதலே போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில் கேரளத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கேரளம் முழுவதும் சாலைகளில் டயர்களைப் போட்டு எரித்தும் மறியல் போராட்டங்கள் மூலமும் பா.ஜ.க. போராட்டம் நடத்தியது. இதில் ஆங்காங்கே தடியடிகளும், கல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.

சந்திரன்

பந்தளம் பகுதியில் சபரிமலை கர்ம சமிதி அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்திற்கான ஆயத்தப் பேரணி நேற்று நடத்தினர். அப்போது சி.பி.எம். அலுவலகம் முன்பு பேரணி சென்றபோது சிலர் பேரணி மீது கல் வீசினர். பதிலுக்கு பேரணியாகச் சென்றவர்களும் கல் வீசியதால் அந்தப் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் சபரிமலை கர்ம சமிதி  அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உண்ணித்தான் (55) உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். நேற்று இரவு சந்திரன் உண்ணித்தான் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மேலும் பதற்றம் அதிகரிகரித்துள்ளது. மலப்புரம் பகுதியில் சி.பி.எம். அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாலக்காட்டில் சி.பி.எம். படிப்பகம் எரிக்கப்பட்டது.

பந்த்

சாலைகளில் மரங்களை முறித்துப் போட்டும், டயர்களைக் கொளுத்தியும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஐயப்ப பக்தர்கள் தமிழக எல்லையில் தங்கியுள்ளனர்.