வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (03/01/2019)

கடைசி தொடர்பு:12:37 (03/01/2019)

` திருவாரூர் தேர்தல்; தி.மு.க-வில் செந்தில்பாலாஜி'!  - ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரித்த சசிகலா

திருவாரூர் தொகுதி நிலையை வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் பார்ப்பது என்பது மத்திய அரசின் திட்டம். இதை சசிகலா உணர்ந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

` திருவாரூர் தேர்தல்; தி.மு.க-வில் செந்தில்பாலாஜி'!  - ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரித்த சசிகலா

திருவாரூர் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார் தினகரன். அக்கட்சியின் வேட்பாளராக எஸ்.காமராஜ் நிறுத்தப்படலாம் என அ.ம.மு.க-வினர் தெரிவிக்கின்றனர். ` இடைத்தேர்தல் தொடர்பாகவும் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாகவும் முன்கூட்டியே எச்சரித்திருந்தார் சசிகலா. அவரது கருத்தை தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' என்கின்றனர் குடும்ப உறவுகள். 

தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். இந்தச் சந்திப்பின்போது, தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உடன் இருந்தனர். அ.ம.மு.க-வை விட்டு செந்தில்பாலாஜி பிரிந்து சென்ற பிறகு நடந்த சந்திப்பாக இது அமைந்ததால், தங்களுடைய மனக்குறைகளையும் சசிகலாவிடம் தெரிவித்தனர் நிர்வாகிகள் சிலர். `தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்லலாமா...இடைத்தேர்தலை சந்திக்கலாமா?' என்ற விவாதமும் நடந்தது. இந்தச் சந்திப்பில், தினகரனோடு சில விஷயங்களில் சசிகலா முரண்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தினகரன் எதிர்பார்க்கவில்லை. `ஆர்.கே.நகரைப் போல வெற்றி பெற வேண்டும்' என்பதால், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். 

செந்தில் பாலாஜி

`` 2018 நவம்பர் மாதம் 9-ம் தேதி சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதன்பிறகு தினகரனோடு சில விஷயங்களில் முரண்பட்டார் செந்தில்பாலாஜி. இதன்பிறகு டிசம்பர் மாதம் நடந்த சிறை சந்திப்பின்போது செந்தில்பாலாஜி உடன் வரவில்லை. தி.மு.க-வுக்கு அவர் சென்றுவிட்டார். `இந்த ஒரு மாதத்துக்குள் நடந்த விஷயங்கள் எதுவும் சசிகலாவுக்குத் தெரியாது' என தினகரன் நினைத்தார். ஆனால், அனைத்து விவரங்களையும் சசிகலா அறிந்து வைத்திருக்கிறார். சொல்லப் போனால், அவர் தெரிந்து வைத்திருக்கின்ற தகவல்கள்கூட, அ.ம.மு.க நிர்வாகிகளுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை" என விவரித்த சசிகலா ஆதரவு நிர்வாகி ஒருவர், 

சசிகலா

`` டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். அப்போது, `செந்தில் பாலாஜியை அழைத்து வாருங்கள்' என்றார் சசிகலா. அதாவது, தி.மு.க-வுக்கு அவர் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே இவ்வாறு கூறினார் சசிகலா. ஆனால், அவர் கூறியதைக் கேட்டு செந்தில்பாலாஜியை, தினகரன் அழைத்துச் செல்லவில்லை. இதுதொடர்பாக மீண்டும் பேசிய சசிகலா, ` செந்தில்பாலாஜி கிளம்பிவிடுவார் போலிருக்கிறது. அவரை அழைத்து வாருங்கள். நான் அவரிடம் பேசுகிறேன்' என்றார். இதற்குப் பதில் அளித்த தினகரன், `இல்லை.. அவர் போக மாட்டார், நான் உறுதியாகச் சொல்கிறேன்' எனப் பேசினார். ஆனால், சசிகலா சொன்னதுதான் நடந்தது. இதற்குக் காரணம், சசிகலாவுக்குத் தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி எழுதிய கடிதம்தான். 

சசிகலா

இதன்பிறகு, `தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்லலாமா வேண்டாமா...' என்பது குறித்துப் பேசுவதற்காக சசிகலாவை சந்தித்தார் தினகரன். டிசம்பர் மாதம் நடந்த சந்திப்பின்போது, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உடன் இருந்தனர். அப்போது பேசிய சசிகலா, ` எப்படியும் ஜனவரி மாதம் திருவாரூருக்குத் தேர்தல் தேதி அறிவித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இவ்வளவு பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வழக்கில் மேல்முறையீட்டுக்குப் போக வேண்டாம். தகுதிநீக்க வழக்கு தொடர்பாக டி.டி.வி சொல்வதைக் கேளுங்கள்' எனக் கூறிவிட்டு, ` திருவாரூர் தேர்தல் வேலைகளைக் கவனி' என தினகரனிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த தினகரனோ, ` திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் சீராகவில்லை. எனவே, திருப்பரங்குன்றத்துக்கு வேண்டுமானால் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்' எனக் கூறியிருக்கிறார். 

தினகரன்

இந்தப் பதிலில் சமாதானமடையாத சசிகலா, ` இல்லை, திருவாரூருக்கு மட்டும்தான் தேர்தல் தேதி அறிவிப்பார்கள்' என தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் சிலரை வைத்துக்கொண்டே கூறினார். `கஜாவைக் காரணம் காட்டினால், தேர்தலை நடத்த மாட்டோம்' எனத் தேர்தல் ஆணையமே கூறியிருந்தது. அப்படியிருந்தும், `தேர்தல் நடக்கும்' என சசிகலா கூறியிருந்தார். சிறைக்குள் அடைபட்டிருப்பவர், இவ்வளவு துல்லியமாகக் கூறியதை ஆச்சர்யமாகக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ` திருவாரூர் நிலையை வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் பார்ப்பது என்பது மத்திய அரசின் திட்டம். இதை சசிகலா உணர்ந்திருப்பதுதான் ஆச்சர்யம். தேர்தல் குறித்த விவரங்களை பா.ஜ.க-வோடு நட்பில் இருக்கும் குடும்ப சோர்ஸுகள் மூலம் அவர் அறிந்து வைத்திருக்கலாம் என நினைக்கிறோம்" என்றார் விரிவாக.