வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (03/01/2019)

கடைசி தொடர்பு:13:25 (03/01/2019)

``ஆசிரியரின் பணி வகுப்பறையுடன் முடிவதில்லை!" - அர்ப்பணிப்பு ஆசிரியை சசிகலா

அரசுப் பள்ளி

ந்தியாவிலுள்ள அனைத்து மாநில கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க ஏதுவாக, ராஜஸ்தானில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சசிகலாவும் ஒருவர். அப்பயிற்சி வகுப்பு குறித்துப் பேசுகிறார், சசிகலா.

``நம் மொழி, கலாசாரம், பாரம்பர்யம் ஆகியவை சாதாரணமான விஷயமல்ல; நம் அடையாளம். இதை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க ஏதுவாக, சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில், கடந்த நவம்பர் 19 - 29-ம் தேதிவரை பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் நான் உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த 12 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டோம். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாநிலத்தின் மொழி, கலாசாரம், உணவு, பழக்கம்வழக்கம் ஆகியவற்றின் சிறப்பை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் தமிழகத்தின் பழைமை மற்றும் சிறப்புகளைப் பற்றி பெருமையாகச் சொன்னதுடன், நம் கிராமியக்கலைகள் சிலவற்றை எல்லோருக்கும் செய்துகாட்டினோம். இந்தப் பயிற்சி வகுப்பு மிகப் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம், மாணவர்களுக்கும் நல்ல விஷயங்களையும் ஒற்றுமை உணர்வையும் அர்ப்பணிப்புடன் கற்பிக்க முடியும்" என்கிறார், உற்சாகத்துடன். 

ஆசிரியை சசிகலா

கடலூர் மாவட்டம், கிள்ளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார், சசிகலா. பள்ளியில் பெருவாரியாகக் கல்வி பயிலும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிவரும் காரணத்துக்காக, சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இது குறித்துப் பேசுபவர், `` `பகுஜன சாகித்ய அகாடமி' என்ற அமைப்பின் சார்பில் சமூக நலன் கருதி செயல்படும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும் தேசிய அளவில் விருது கொடுத்து கெளரவிக்கிறார்கள். டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், எனக்கு `சாகித்ய ரத்னா தேசிய விருது' மற்றும் பதக்கமும் கொடுத்தார்கள். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் விருது பெற்றார்கள். அந்நிகழ்ச்சியில், பலதரப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் அவர்களின் சமூக எண்ணங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொரு ஆசிரியரின் பணியும், வகுப்பறையுடன் முடிவதில்லை. அதைத்தாண்டி, சமூகத்துடன் தன்னையும், மாணவர்களையும் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை இவ்விருதும், ராஜஸ்தான் பயிற்சி வகுப்பும் நன்றாக உணர்த்தின. இன்னும் செய்யவேண்டிய பணிகள் அதிகம் இருப்பதையும் உணர்ந்துகொண்டேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.