`விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்..!' - கொந்தளித்த மாதர் சங்கம்; கைது செய்த காவல்துறை | Madhar Sangam conducts protests in Kilpauk Government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (03/01/2019)

கடைசி தொடர்பு:15:20 (03/01/2019)

`விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்..!' - கொந்தளித்த மாதர் சங்கம்; கைது செய்த காவல்துறை

மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மாதர் சங்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 27 வயதுப் பெண், தனக்கும் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் திட்ட வட்டமாக மறுத்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இன்று காலை திடீரெனக் கூடி, மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது, ``மாங்காட்டைச் சேர்ந்த பெண் கீழ்ப்பாக்கம் மற்றும் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்றபோது அந்த நேரத்தில் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாகப் பதவிவிலக வேண்டும்.``என்று வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.