வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (03/01/2019)

கடைசி தொடர்பு:14:59 (03/01/2019)

`சந்தோஷமாக வந்தேன்... இன்று வாழ்க்கையில்ல' - திருந்தி வாழ்ந்த ரவுடி மனைவி கதறல்

 கொலை செய்யப்பட்ட ரவுடி சந்தானம் மனைவி சுதா 

சென்னை அண்ணாநகரில் திருந்தி வாழ்ந்த ரவுடி சந்தானம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் மனைவி சுதா, `சந்தோஷமாக வந்தேன். ஆனால், இன்று எனக்கு வாழ்க்கையில்லை'' என்று கண்ணீர்மல்க கூறினார். 

சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (36) இவருக்கு சுதா, சினேகா என இரண்டு மனைவிகள் உள்ளனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணனின் கூட்டாளியாக சந்தானம் சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டுவந்தார். சந்தானத்தின் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் ரவுடிகள் சரித்திரப் பதிவேடு உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சிய சந்தானம், சில காரணங்களுக்காக திருந்தி வாழத் தொடங்கினார். தற்போது பெயின்டராக வேலை பார்த்துவந்தார். 

 ரவுடி கொலை செய்யப்பட்ட இடம்

இவர் மீது கொலை, கொலை முயற்சி அடிதடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் வேலை முடிந்து நேற்றிரவு அண்ணாநகர் 2-வது பிரதான சாலை வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து மிளகாய் தூளைத் தூவிய கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சரிந்தார். சந்தானத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 

அப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சந்தானத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம் இறந்தார். இதையடுத்து, அண்ணாநகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். 

ரவுடி சந்தானத்தின் அம்மா ஷீபாராணி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``பிரபல ரவுடி ராதாவின் கூட்டாளியான சந்தானம், சில ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்தார். மனைவி சுதாவுடன் குடியிருந்தார். அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள சிலருடன் சந்தானத்துக்கு தகராறு இருந்துவந்துள்ளது. இதனால் பழிக்குப் பழிவாங்க சந்தானத்தை அந்தத் தரப்பு கொலை செய்துள்ளது. அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சந்தானம் கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (எ) சின்ன ராபர்ட், அவரின் சகோதரர் ஜோசப் மற்றும் 4 பேர் மீது போலீஸாருக்கு சந்தேகம் உள்ளது. அவர்களைத் தேடிவருகிறோம். சில மாதங்களுக்கு முன், ரவுடிஸியத்தில் தலைதூக்கி வந்த சின்ன ராபர்ட், ஜோசப்பை சந்தித்த சந்தானம் அவர்களுக்கு புத்திமதி கூறி திருந்தி வாழும்படி சொல்லியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. 

இதனால் அன்னை சத்யா நகரில் சந்தானம் உயிரோடு இருக்கும்வரை ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் தலைதூக்க முடியாது என்று கருதிய சின்னராபர்ட், ஜோசப் ஆகியோர் திட்டம்போட்டு சந்தானத்தை கொலை செய்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைப் பிடித்து விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்" என்றார்.  

ரவுடி சந்தானத்தின் மனைவி சுதா

சந்தானத்தின் அம்மா ஷீபாராணி கூறுகையில், ``என்னுடைய மகனைக் கொலை செய்தவர்கள் பலரை வெட்டிவிட்டு சிறைக்குச் சென்றவர்கள். சில ஆண்டுகளாக தான்உண்டு தன்வேலை உண்டு என்று திருந்தி வாழ்ந்த அவனை இப்படி அநியாயமாக கொலை செய்துவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட ஸ்கூல் படிக்கிற பையனை வெட்டிவிட்டனர். அந்த வழக்கில் ஜெயிலுக்குப் போனவர்கள் வெளியில் வந்துவிட்டார்கள். சிலருடைய செல்வாக்கால் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்" என்றார் கண்ணீருடன்.

சந்தானத்தின் மனைவி சுதா கூறுகையில், ``எவ்வளவு பேரை இப்படி சாகப்படிப்பார்கள். சந்தோஷமாக வாழவந்தேன். இன்று எனக்கு வாழ்க்கை இல்லை" என்று கதறினார்.