வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:15:07 (03/01/2019)

`திருவாரூரில் உதயநிதி களமிறங்கணும்!' - அறிவாலயத்தில் தாக்கலான விருப்ப மனுக்கள்

திருவாரூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடத் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்திருக்கிறார். 


கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் சட்டமன்றத் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. மந்தமாக இருந்த தமிழ்நாடு அரசியல் களம் இந்த அறிவிப்பால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. 

அ.தி.மு.க, தி.மு.க, அ.மு.மு.க என மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. மூன்று கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் இறங்கியுள்ளன. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும். 

ஆர்.கே.நகர் தோல்வியைத் தழுவியதாலும் கருணாநிதியின் சொந்தத் தொகுதி என்பதாலும் தி.மு.க இத்தேர்தலில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்து நிலையில், மு.க.ஸ்டாலினே திருவாரூரில் களமிறங்க உள்ளதாக ஒரு புதுத் தகவல் வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கலைவாணன்
 

இந்நிலையில் பூண்டி கலைவாணன் இன்று அறிவாலயம் வந்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர், `திருவாரூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும்’ என விருப்ப மனுவைத் தாக்கல் செய்துள்ளார் பூண்டி கலைவாணன். மேலும், பூண்டி கலைவாணன் போட்டியிட வேண்டும் என 40 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, தி.மு.க தொண்டர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரி விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும்  தி.மு.க வேட்பாளர் யார் என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.

உதயநிதி ஸ்டாலின்

விருப்ப மனுத்தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பூண்டி கலைவாணன், ``திருவாரூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. ஆனால், திருவாரூர் தொகுதி மக்கள் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர். கடந்த தேர்தலில், கருணாநிதி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி திருவாரூர். அங்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். கட்சியினர் ஆசையும் அதுதான். அதனால் ஸ்டாலின் பெயரில் நான் விருப்ப மனு வழங்கினேன். உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவர் ரசிகர் மன்றத்தினரும் விருப்பமனு வழங்கினர். என்னையும் விருப்ப மனுத்தாக்கல் செய்யும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்று எனது பெயரிலும் விருப்பமனு தாக்கல் செய்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்வேன்’’ என்றார். 

உதயநிதி


பூண்டி கலைவாணன், தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு தாக்கல் செய்திருந்தால், அவர்தான் வேட்பாளர் என்று ஓரளவுக்கு உறுதியாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால், அவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்படலாம் என்கிறது தி.மு.க வட்டாரம்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விருப்ப மனுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க