`விண்ணப்பம் தர மறுக்கிறார்கள்!' - திருவாரூர் தொகுதியில் போட்டியிட வந்த அ.தி.ம.மு.க பிரமுகர் குமுறல் | nomination begun in Thiruvarur constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (03/01/2019)

கடைசி தொடர்பு:15:56 (03/01/2019)

`விண்ணப்பம் தர மறுக்கிறார்கள்!' - திருவாரூர் தொகுதியில் போட்டியிட வந்த அ.தி.ம.மு.க பிரமுகர் குமுறல்

திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. "எங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு விண்ணப்பத்தைத் தர மறுக்கின்றனர்" என அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் குற்றம் சாட்டினார்.

தேர்தல் அலுவலர் முருகதாஸ்

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் எஸ்.முருகதாஸ், தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு கேட்டு வந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப்ப விநியோகம் தொடங்கி அரைமணி நேரத்திலேயே 8 சுயேச்சை வேட்பாளர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச்சென்றனர்.

முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்

முதல் வேட்புமனுவை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அக்னி ஆத்மா கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். அவரைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் பத்மராஜன் என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இதனிடையே, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருபுவனம் தாஜுதீன், தென்காசியைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் தேர்தல் விண்ணப்பம் கேட்டபோது, தாஜுதீனுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முத்துக்குமாருக்கு விண்ணப்பம் கொடுக்கப்படவில்லை.

பசும்பொன் பாண்டியன்

முத்துக்குமாருக்கு விண்ணப்பம் தீர்ந்துவிட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "இடைத்தேர்தல் தேதி அறிவித்து, விண்ணப்ப விநியோகம் தொடங்கி அரைமணி நேரத்திலேயே விண்ணப்பம் இல்லை எனக் கூறி, எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விண்ணப்பத்தைத் தர மறுக்கின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற அடிப்படையில், அ.தி.மு.க தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, விண்ணப்பங்களைத்  தராமல், விண்ணப்பத்தை தாங்கள் விரும்புகிறவர்களுக்கு மட்டும் கொடுக்க சதி செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸிடம் கேட்டபோது, "ஆன்லைனில் இருந்து பிரின்ட் அவுட் எடுக்க காலதாமதம் ஆனது. ஆனால், அதற்குள் வெளியே சென்று குறை கூறுகின்றனர். தற்போது எங்களிடம் தேவையான அளவு வேட்புமனு படிவங்கள் இருக்கின்றன" என்று விளக்கம் அளித்தார்.