வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:46 (03/01/2019)

கர்ஜித்த களியக்காவிளை எஸ்.ஐ... சத்தமில்லாமல் கலைந்த பா.ஜ.க தொண்டர்கள்!

கேரளாவில் சபரிமலை கோயிலில் இரு பெண்கள் வழிபட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. கேரளாவில் பந்த நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் முயன்று வருகின்றனர்.

பா.ஜ.க தொண்டர்களை எச்சரித்த எஸ்.ஐ

தமிழக எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் இன்று கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தை மறித்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பேருந்தையும் ஓட்டுநரையும் தாக்க முயன்றனர். களியக்காவிளை போலீஸார் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். 

பா.ஜ.க தொண்டர்கள் போராட்டம்

ஆனால், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் போலீஸார் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை. பேருந்தை அடித்து நொறுக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் பாரதிய ஜனதா கட்சியினரைப் பார்த்து சிங்கம் சூர்யா ஸ்டைலில் அதிரடியாக மிரட்டினார். சிங்கம் போல கர்ஜித்த எஸ்.ஐ மோகனைப் பார்த்து மிரண்டுபோன பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்கு சப்த நாடியும் அடங்கிப்போனது. இதற்கு மேல் அங்கேயிருந்தால் நல்லது இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ சத்தமில்லாமல் இடத்தைக் காலிச் செய்துவிட்டு ஓடிவிட்டனர். 

சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்காக அப்பாவி பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டியடித்தற்காக எஸ்.ஐ மோகனை வெகுவாகப் பாராட்டினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க