`கருணாநிதியின் பெருமையைப் போற்றிப் பேசினீர்கள்!' - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு மு.க.ஸ்டாலின் நன்றி | dmk leader mk stalin meets tn cm edappadi palanisami

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (03/01/2019)

கடைசி தொடர்பு:16:10 (03/01/2019)

`கருணாநிதியின் பெருமையைப் போற்றிப் பேசினீர்கள்!' - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அவரின் பெருமைகள் குறித்து முதல்வர், துணை முதல்வர்  மற்றும் உறுப்பினர்கள் பேரவையில் பேசினர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி, ``தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர். சிறப்பான திட்டங்களை தமிழகத்துக்கு அளித்த கருணாநிதியை அ.தி.மு.க-வும் சில நேரங்களில் பின்பற்றியுள்ளது. கருணாநிதியின் சாதனைகள், இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்" என்றார்.

 

இதற்கிடையே, கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வாழ்நாள்களில் பாதி நாள்களுக்கும் மேல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு நாளும், அன்று புதிதாக வந்த உறுப்பினரைப் போல, பேரார்வத்துடனும் துடிப்புடனும் பங்கெடுத்து, அவையின் நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் தந்து, "மக்கள் பணியே, மகேசன் பணி" என்ற லட்சியத்துக்காக இடையறாது தொண்டாற்றிய கருணாநிதிக்கு, பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, 13 முறை வெற்றி வீரராகச் சட்டப்பேரவைக்குள் நுழைந்து, அரை நூற்றாண்டுக் கால வரலாறு படைத்தவர் கருணாநிதி. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் நாடும் ஏடும் வீடும் ஏற்றிப் போற்றிட நற்பணியாற்றியவர்.

ஏராளமான திட்டங்கள், எத்தனையோ சட்டங்கள், கணக்கில் அடங்காத உதவிகள், சலுகைகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அமைத்து கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பிதான் கருணாநிதி.

ஸ்டாலின்

சிலருக்கு கனவுகள் இருக்கும்; ஆனால் அதை நிறைவேற்றும் பதவிக்கு அவர்களால் வரும் வாய்ப்பு இருக்காது. சிலர் பதவிகளை அடைவார்கள்; ஆனால், அவர்களுக்கு தொலைநோக்குச் சிந்தனைகள் இருக்காது. தொலைநோக்குச் சிந்தனையும் சீரிய கனவும் அவற்றை மெய்ப்பட வைத்து, செயல்படுத்திக் காட்டும் பொறுப்பும் பதவியும் அதிக ஆண்டுகள் கருணாநிதிக்கே வாய்த்தது. 

அத்தகைய கருணாநிதியின் மறைவையொட்டி இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அவர் பெருமையைப் போற்றிப் பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு, தி.மு.க தலைவர் என்ற முறையிலும் கருணாநிதியின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின்

கருணாநிதியின் மறைவையொட்டி, பல்துறைச் சான்றோர்கள் பங்கேற்ற புகழ் வணக்க நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடந்தன. அந்த வரிசையில், இன்று பேரவையில் நிறைவேறிய இரங்கல் தீர்மானம் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. தந்தை பெரியாரின் சிந்தனையுடன், அறிஞர் அண்ணாவின் வழியில், கருணாநிதி உருவாக்கிக் கொடுத்த ஜனநாயக மாண்பை எந்நாளும் காப்போம்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்துக்குப் பிறகு, சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக, சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க