வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (03/01/2019)

கடைசி தொடர்பு:17:37 (03/01/2019)

`நான் ரவுடியாகிவிட்டேன்; நீங்களாவது திருந்துங்கள்’ - புத்திமதி சொன்ன ரவுடியைக் கொன்றவர்கள் வாக்குமூலம்

மனைவியுடன் ரவுடி சந்தானம்

அண்ணாநகரில் திருந்தி வாழ்ந்த ரவுடி சந்தானம் கொலையில் 6 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். போலீஸிடம் சிக்கியவர்கள், `சந்தானம் தல எங்களுக்கு புத்திமதி சொன்னது பிடிக்கவில்லை. அதனால் கொலை செய்துவிட்டோம்' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

 சென்னை அண்ணாநகர், அன்னை சத்யாநகரைச் சேர்ந்த சந்தானம் என்ற ரவுடி நேற்றிரவு கொலை செய்யப்பட்டார். அண்ணாநகர் காவல் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் சந்தானத்தின் பெயர் உள்ளது. இவர், ரவுடி தொழிலை விட்டுவிட்டுத் திருந்தி வாழ்ந்துவந்த நிலையில்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் கொலை தொடர்பாக அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சதீஷ், ஜோசப், அரி, விமல் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் என 6 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ராபர்ட் என்கிற சின்ன ராபர்ட்டை போலீஸார் தேடிவருகின்றனர். பிடிப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது கொலைக்கு அவர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

  ரவுடி சந்தானத்தின் மனைவி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருந்தி வாழ்ந்த ரவுடி சந்தானம், தன்னைப்போல யாரும் ரவுடியாக மாறிவிடக் கூடாது என்று குடியிருக்கும் பகுதியில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். அப்படிதான் சின்ன ராபர்ட், ஜோசப் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளார். அதை அவர்கள் கேட்கவில்லை. இந்தநிலையில் சின்னராபர்ட் மீது சில வழக்குகள் பதிவாகின. இதனால் சின்ன ராபர்ட்டிடம் நான்தான் ரவுடியாகி பல பிரச்னைகளைச் சந்தித்துவிட்டு இப்போது திருந்திவாழ்கிறேன். இப்போதுகூட என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சந்தானம் கூறியுள்ளார்.

மேலும், உனக்கு சின்ன வயசு, இந்த வயதில் இப்படித் தவறு செய்தால் உன் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று அறிவுரை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராபர்ட்டை சந்தானம் அடித்துள்ளார். அதன் பிறகும் ராபர்ட், ஜோசப் மற்றும் அவர்களின் நண்பர்கள் அந்தப் பகுதியில் கூட்டமாக நின்று பேசும்போதெல்லாம் புத்திமதி கூறுவதோடு விளையாட்டுக்கு அடித்தும் வந்துள்ளார் சந்தானம். இதனால் சந்தானத்தின் மீது சின்ன ராபர்ட், ஜோசப் மற்றும் அவரின் நண்பர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். சந்தானம், தனியொரு ஆளாக பலரை சமாளிக்கும் அளவுக்கு உடலில் வலிமை கொண்டவர். இதனால்தான் அவரின் முகத்தில் முதலில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு அரிவாளாலும் கத்தியாலும் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளனர்" என்றனர். 

ரவுடி சந்தானம் கொலை செய்யப்பட்ட இடம்

கடந்த 2000-ம் ஆண்டில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து சந்தானம் செய்த அடாவடிகள் அதிகம். அப்போது சந்தானத்தின் பெயர் போலீஸ் நிலையங்களில் பிரபலமாக இருந்தது. பிரபல ரவுடி ராதாவுடன் காரில் பந்தாவாக வலம் வந்த சந்தானம் சில காரணங்களுக்காக திருந்தி வாழத் தொடங்கினார். ரவுடி தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் குடும்பத்தை நடத்திவந்தார். சந்தானத்தின் மனமாற்றம் அன்னை சத்யா நகர் பகுதி மக்களையே ஆச்சர்யப்பட வைத்தது. திருந்தி வாழ்ந்த சந்தானம், மனைவி, குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். சந்தானம் கொலை செய்யப்பட்டவுடன் பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனப் போலீஸார் கருதினர். ஆனால், ரவுடிகளாக யாரும் மாறக்கூடாது என்று புத்திமதி கூறியதால் சந்தானம் கொலை செய்யப்பட்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தானம் கொலை வழக்கில் போலீஸாரிடம் சிக்கியவர்களில் இரண்டு பேர், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

கைது செய்யப்பட்ட ரவுடிகள்

தன்னைப்போல யாரும் ரவுடியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அன்னை சத்யாநகர் பகுதியில் இளைஞர்களுக்கு புத்திமதி சொல்லிவந்த சந்தானத்துக்கு அதுவே அவரின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். சந்தானத்தை வெட்டிய தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது உயிருக்குப் போராடிய அவரை போலீஸாரின் உதவியுடன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். உடல் முழுவதும் கத்தி குத்து மற்றும் அரிவாள் வெட்டுக்கள் விழுந்ததால் ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது. குறிப்பாக அவர் வந்த மோட்டார் சைக்கிள் முழுவதும் ரத்தமாகவே காட்சியளித்தது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே கொலையாளிகள் யாரென்று அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் கண்டறிந்துவிட்டனர். அதற்கு சிசிடிவி கேமராவும் உறுதுணையாக இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.