வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (03/01/2019)

`கழிவறையை கட்டத்தொடங்கிட்டோம்; ஆனா கட்டல!'- லட்சத்தை அ.தி.மு.க-வினர் சுருட்டியதாகப் புகார்

"கழிவறை கட்டாமலே ஒரு லட்சத்து 45 ஆயிரம் வரை பணம் கையாடல் செய்திருக்கிறார்கள். இதற்கு, அதிகாரிகளும் அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளும் காரணம். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கிராம மக்கள், அரியலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                                        கழிப்பறையில் ஊழல்

அரியலூர் மாவட்டத்தில், மத்திய அரசின் சார்பில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள வஞ்சினாபுரம் ஊராட்சியில், 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு, தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனபால் தலைமையில் கிராம மக்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தனர். 

                                                கழிப்பறை

புகார் கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் தனபாலிடம் பேசினோம். ”வஞ்சினாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 500 குடும்பங்களுக்குக் கழிவறை கட்ட அதிகாரிகள் தேர்வுசெய்துள்ளனர்.

கட்டப்படாத கழிப்பறை

இதில் 53 நபர்களுக்குக் கழிவறை கட்டாமல், கட்டத் தொடங்கி உள்ளதாகக் கூறி முதல் தவணைத் தொகையான ஒரு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரம் ரூபாயைக் கையாடல் செய்துள்ளனர். இதற்கு, அதிகாரிகளும் உடந்தை. இப்பணத்தை ஒதுக்கச் சொல்லி அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். இம்முறைகேடுகளை முறையாக விசாரித்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். போலீஸார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தார்.