`லைசென்ஸுடன்தான் வாகனம் ஓட்டுவோம்!'- அரசுப் பள்ளி மாணவர்கள் எடுத்த உறுதிமொழி | We will follow traffic rules ; says government school students

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:31 (03/01/2019)

`லைசென்ஸுடன்தான் வாகனம் ஓட்டுவோம்!'- அரசுப் பள்ளி மாணவர்கள் எடுத்த உறுதிமொழி

'சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் விழிப்புஉணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

அரசு பள்ளி மாணவர்கள் எடுத்த உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்புப் பிரிவு மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிடும் வகையில் மாணவர்கள் உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்கிட சாலைப்பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க விழிப்புஉணர்வு ஏற்படுத்திடும் வகையில்,  மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாணவர்கள் எடுத்த உறுதிமொழி

”வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகி, ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனத்தை ஓட்டுவேன், தலைக்கவசம் அணிந்துதான் வாகனம் ஓட்டுவேன். பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்ல வலியுறுத்துவேன். நான்கு சக்கர வாகனம் ஓட்டும் என் பெற்றோர் மற்றும் ஓட்டுநர்களிடம் சீட் பெல்ட் அணிந்து ஓட்டிடுமாறு அறிவுறுத்துவேன். இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பேச மாட்டேன், மற்றவர்கள் பேசினாலும் தடுத்து அறிவுரை கூறுவேன்.

வேன் அல்லது ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிகமான எண்ணிக்கையில் நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க மாட்டேன். பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்பவர்களிடம் அறிவுரை கூறுவேன். சாலையில் இடது பக்கமாகவே செல்வேன்.  சாலை விதிகளை மதித்து நடப்பேன்“ எனக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புஉணர்வு  ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், சாலை விதிகள், சின்னங்கள் குறித்தும் அவற்றின் பொருள் மற்றும் அவசியம், முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க