`குட்டி ஜப்பான் என்ற பெருமைகொண்ட சிவகாசி சீரழிந்துகொண்டிருக்கிறது!' - பாலபாரதி வேதனை | Bala barathi slams government for crackers factory

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:50 (03/01/2019)

`குட்டி ஜப்பான் என்ற பெருமைகொண்ட சிவகாசி சீரழிந்துகொண்டிருக்கிறது!' - பாலபாரதி வேதனை

`பட்டாசு ஆலைகளைத் திறக்க இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என உண்ணாவிரதப் போராட்டத்தின்போது திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலபாரதி கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டத்தில், நேரடி தொழிலாளர்கள், மறைமுகத் தொழிலாளர்கள் எனப் பட்டாசுத் தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், பட்டாசு உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளிகள் வேலையின்றித் தவித்துவருகின்றனர். வேலையில்லாததால் சிவகாசியைச் சுற்றியுள்ள ஆண்கள் கட்டட வேலை, அச்சு வேலை மற்றும் திருப்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில், மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைகள் திறக்கப்படும் வரை பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம், சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, மாரனேரி, மேட்டமலை, கன்னிசேரி, ஆமத்தூர், எம்.புதுப்பட்டி என விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 12 இடங்களில் பட்டாசுத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி, திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்றார்.

Balabarathi

அப்போது அவர், காவிரி ஆற்றிலும் அமராவதி ஆற்றிலும் தினமும் மாசு கலக்கிறது. ஆனால், ஆண்டுக்கு ஒருநாள் வெடிக்கப்படும் பட்டாசால் மாசு ஏற்படுவதாகக் கூறி பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது. பசுமைப் பட்டாசு தயாரிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்று விளக்கம் தரவில்லை. தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இது சம்பந்தமாக கருத்து எதுவும் கேட்காமலேயே பசுமைப் பட்டாசு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் மின்கம்பம் நடும் திட்டம், வைகை அணையில் தெர்மக்கோல் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தும் அமைச்சர்கள்தான் தற்போது உள்ளனர். இப்படி இருந்தால் எப்படி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க முடியும்.

fasting

ஸ்டெர்லைட் ஆலையால் தினந்தோறும் கழிவு  வெளியேறி மாசு ஏற்படுவதாகக் கூறி போராட்டம் நடத்திய 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த ஸ்டெர்லைட்டை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னையான பட்டாசுத் தொழிலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குட்டி ஜப்பான் என்ற பெருமை கொண்ட சிவகாசி, தற்போது சீரழிந்துகொண்டிருக்கிறது. பட்டாசுத் தொழிலாளர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 50 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பங்கேற்ற போராட்டத்தின்போது, ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதியளித்தார். ஆனால், இதுவரை ஆலைகளைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக ஆலைகளைத் திறக்க வேண்டும்.

fasting

பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் அறிவிக்க பணம் இருக்கும்போது, வாழ்வை இழந்துள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பணமில்லையா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நரேந்திரமோடி தெரிவித்தார். ஆனால், எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. மாறாக, இருந்த வேலைவாய்ப்பும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்தார்.