வயிற்றுக்குள் நாப்கினை வைத்து சர்ஜரி! - அரசு மருத்துவமனை டீன் மீது புகார்! | Napkin In Stomach : Complaint Against Kilpauk Govt Hospital Dean

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (03/01/2019)

கடைசி தொடர்பு:20:50 (03/01/2019)

வயிற்றுக்குள் நாப்கினை வைத்து சர்ஜரி! - அரசு மருத்துவமனை டீன் மீது புகார்!

சாத்தூர் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே மருத்துவமனையின் டீன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சில நாள்களில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதேபோன்று பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 27 வயது பெண் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி திட்டவட்டமாக மறுத்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், டீன் வசந்தாமணி மீது மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.  

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி அஜிதா, மகப்பேறு சிகிச்சைக்காக கடந்த 2012-ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய வசந்தாமணி, அஜிதாவுக்கு அறுவைசிகிச்சை செய்ததாகவும், அப்போது, அவர் வயிற்றுக்குள் சானிட்டரி நாப்கினை வைத்து தைத்து விட்டதாகவும் டீன் வசந்த மணிபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அவரது கணவர் மகேஷ் அளித்துள்ளார். மேலும், வசந்தாமணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணியிடம் கேட்டோம். 

"அஜிதா என்ற பெண், கடந்த 2012-ம் ஆண்டு நான் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அங்கு சிகிச்சை முடித்து அவர் நல்ல உடல் நலத்துடன்தான் வீடு திரும்பினார். அதன் பிறகு, வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்திருக்கிறார். ஆனால், எட்டு மாதங்களுக்குப் பிறகு நான் அளித்த சிகிச்சையால்தான் இப்படி நடந்ததாக என்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஒரு மருத்துவர்மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்போதே  மருத்துவக் கவுன்சிலில் புகார் கொடுத்திருந்தேன். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து, எனக்கு பாதுகாப்பும் கேட்டிருந்தேன். தற்போது மாங்காட்டைச் சேர்ந்த பெண் புகார் கொடுத்திருப்பதால், மீண்டும் நெருக்கடி கொடுக்கலாம் என்று பார்க்கிறார்கள். 

டீன் மீது புகார் அளித்த தம்பதி

யாரும் யாரையும் குற்றம் சாட்டலாம்; அது அவர்களது உரிமை. என்மீது அவர்கள் புகார் அளித்திருப்பதன் நோக்கம், அவர்கள் பணம் பெற வேண்டும் என்பதே. நீதிமன்றத்தில் என்மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அப்படி நடந்திருந்தால், நீதிமன்றத்திலேயே உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாமே. அதைவிடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மீது ஒரு புகார் வந்த பிறகு  தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து என்மீது அவதூறு பரப்ப நினைக்கிறார்கள். `நல்ல பொறுப்பில் இருக்கிறீர்கள். பணம் கொடுத்தால் என்ன?' என்று மீண்டும் மீண்டும் என்னைத் தொந்தரவுசெய்கிறார்கள். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதால்தான் அந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டிருக்கிறேன். எதிர்வரும் காலங்களிலும் சட்டரீதியாகவே எதிர்கொள்வேன். அவர்களின் தவறான நோக்கம் நிறைவேறாது. இது ஒரு பக்கமிருக்க, மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்கும் நான் சிகிச்சை அளித்ததாக அவதூறு பரப்பி வருகிறார்கள். அந்தப் பெண் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, நான் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்தேன். ஆனால், நான் அப்போது மருத்துவராக இருந்தாகவும், நான்தான் மாங்காடு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தாகவும் அவதூறு பரப்புகிறார்கள். அந்தப் பெண்ணை நான் பார்க்கவில்லை. கையாலும் தொட்டதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு புகார் கொடுக்க வந்தபோதுதான் முதன் முதலில் அவரைப் பார்த்தேன். அதுகுறித்த விசாரணை நடந்துவருகிறது. தவறு நடந்திருந்தால், மருத்துவ பணியார்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க