வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (03/01/2019)

500 ரூபாய் தரிசன டிக்கெட்டை 1,000 ரூபாய்க்குக் கொடுக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்! - பக்தர்கள் புகார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு பக்தர்களிடம் கட்டணமாக ரூ.1,000 வாங்கிக்கொண்டு, 500 ரூபாய் டிக்கெட் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து, அறநிலையத்துறை பணியாளர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் உரையாடல் வீடியோ, தற்போது வாட்ஸ்அப்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

தமிழகத்தில் உள்ள முதுநிலை கோயில்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்று. தமிழகத்தில் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய கோயில்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இக்கோயிலும் இடம் பெற்றுள்ளது. விழா நாள்கள் மற்றும் விசேஷ நாள்களில் கட்டளைகள் மற்றும் தரிசன கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்புகளை கோயில் நிர்வாகம் பக்தர்களுக்குத் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்போ, அறிவிப்பு பலகையிலோ பக்தர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. கட்டணத்துக்கான ரசீது, நிரந்தரமாக அச்சிடப்பட்ட பில்களும் வழங்கப்படுவதில்லை எனவும் பக்தர்கள் புகார் கூறி வருகின்றானர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அப்போது சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் ரூ.2,000 கொடுத்து, தரிசன டிக்கெட் விலை எவ்வளவு எனக் கேட்டுள்ளார். கவுன்டரில் டிக்கெட் வழங்கும் ஊழியர் ரூ.1,000 என்கிறார். ஆனால், அவருக்கு ரூ.500-க்கான 4 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. 4 டிக்கெட்டுகளிலும் ரூ.500 என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தப் பக்தர் புகார் கூறி, திருக்கோயில் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் பேசுவது போன்ற வீடியோ தற்போது வாட்ஸ் அப்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து திருகோயில் தரப்பில் கேட்டபோது, “அதிகாலை 1 முதல் 4 மணி வரை விஸ்வரூப தரிசனத்துக்காக, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு டிக்கெட் கட்டணம் ரூ.1,000 தான். அதற்கான டிக்கெட்தான் வழங்கப்பட்டது. மற்ற நாள்களில் விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணம் என்பதால், ரூ.1000 எனக் கணக்கிட்டு ஒரு பக்தருக்கு இரண்டு 500 ரூபாய் டிக்கெட்டுகள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது” எனக் கூறப்பட்டது. இக்கோயிலில் தரிசனக் கட்டண குளறுபடிகளைப் பயன்படுத்தி பக்தர்களிடையே மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பக்தர்களை ஏமாற்றி அழைத்துச் செல்வதாகவும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்குக் கோயில் வளாகத்திலும் கட்டண விபரங்கள் குறித்து முறையான அறிவிப்புப் பலகை பெரிய அளவில் வைக்க வேண்டும் எனவும், கட்டண உயர்வு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிகவும் பிரசித்திபெற்ற திருப்பதி கோயிலில் அதிகபட்சக் கட்டணமாக சுப்பரபாத தரிசனத்துக்குக் கட்டணமாக ரூ.500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதைவிட அதிகபட்சக் கட்டணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அபிஷேக தரிசன கட்டணம் ரூ.2,000 வரை வசூலிக்கப்படுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க