வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (03/01/2019)

”இது சிறுத்தையின் கால்தடம் இல்லை!” - புலி பீதியில் கும்பக்கரை பகுதி விவசாயிகள்

கும்பக்கரை அருவி அருகே உள்ள விவசாயப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது  தொடர்பாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் நேரில் ஆய்வுசெய்தனர்.

வனத்துறையினர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. அதைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதியில், காளீஸ்வரி கோயில் அருகே உள்ளது கண்ணன் என்பவரது தென்னந்தோப்பு. இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்ற கண்ணன், அங்கே பெரிய அளவில் கால்தடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இத்தகவல் வேகமாகப் பரவ, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் நேரில் வந்து அந்த கால்தடத்தை ஆய்வுசெய்தனர். இது தொடர்பாக கண்ணன் கூறும்போது, “இப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும். சிறுத்தையின் கால்தடம் எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இது சிறுத்தையின் கால்தடத்தைவிட பெரியதாக இருக்கிறது. ஒருவேளை இது புலியின் கால்தடமாக இருக்கலாம். விவசாயப் பகுதிக்குள் புலி வருவது எங்களை அச்சமடையச் செய்திருக்கிறது. வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, புலியைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

வனத்துறையினர்

“அது சிறுத்தையின் கால்தடமா அல்லது புலியின் கால்தடமா என ஆய்வு செய்திருக்கிறோம். தேவைப்படின் கூண்டுவைத்து அந்த விலங்கைப் பிடிக்க ஏற்பாடுசெய்யப்படும்” என்கிறார், தேவதானப்பட்டி ரேஞ்சர் சுரேஷ்குமார். அது புலியின் கால்தடம் எனப் பரவிய செய்தியால், அப்பகுதி விவசாயிகளும் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.