தொற்றுநோயின் பிடியில் நாய்கள் - அலட்சியம்காட்டும் மாவட்ட நிர்வாகம்! | Dogs in the clutches of infection. District administration showing negligence

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:02:00 (04/01/2019)

தொற்றுநோயின் பிடியில் நாய்கள் - அலட்சியம்காட்டும் மாவட்ட நிர்வாகம்!

தொற்றுநோயின் பிடியில் நாய்கள்! அலட்சியம்காட்டும் மாவட்ட நிர்வாகம்.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்குத் திடீர் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால், அவற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், எதனால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் ஆய்வுசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”தேனி, பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்குத் தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளதுபோலவும், முடிகள் அனைத்தும் உதிர்ந்து, பார்க்கவே கொடூர தோற்றத்தோடு தெருக்களில் சுற்றித்திரிகின்றன. குட்டி நாய்கள் முதல் வயதான நாய்கள் வரை அனைத்துக்கும் இதே போன்ற ஒரு தொற்றுநோய் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை, கால்நடை மருத்துவமனை வாசலில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் உண்டு. அங்கே வேலைசெய்யும் மருத்துவர்களும், ஊழியர்களும் அந்த நாய்களைப் பார்த்துவிட்டுதான் மருத்துவமனைக்குள் செல்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்த நாய்கள் மனிதர்கள் அருகே வந்தாலே மக்கள் அச்சமடைந்து நகர்ந்து செல்கிறார்கள். வீட்டில் வளர்க்கும் நாய்களைத் தெருவுக்கு கொண்டுவரத் தயங்குகிறார்கள். எங்கே தங்கள் நாய்களுக்கும் தொற்றுநோய் பரவிவிடுமோ என அச்சமடைகிறார்கள்.

நாய்களுக்கு என்ன பிரச்னை என்று முதலில் ஆய்வுசெய்ய வேண்டும். ஏன் இதுபோன்ற தொற்றுநோய்களுக்கு நாய்கள் ஆளாகின்றன என மக்கள் தெரிந்துகொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்குமா?