வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (04/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (04/01/2019)

மூன்று மாநில ஆளுநர்கள் பங்கேற்ற வேலூர் சாமியாரின் பிறந்தநாள் விழா - போக்குவரத்து மாற்றப்பட்டதால் மக்கள் அவதி

வேலூர் சாமியார் பிறந்த நாள் விழாவில் மூன்று மாநில ஆளுநர்கள் பங்கேற்றதால், போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சாமியார்

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலை நிறுவிய சக்தி அம்மா சாமியாரின், 43-வது பிறந்தநாள் விழா இன்று (3-ம் தேதி) ஜயந்தி விழாவாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, அசாம் ஆளுநர் ஜகதீஸ் முஹீ, உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மௌர்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில், அந்தச் சாமியாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கர்நாடக ஆளுநரும் சாமியாருக்கு தீப ஆராதனை காட்டி, ‘கடவுளை வணங்குவதைப் போல்’ சாமியாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து, சக்தி அம்மா சாமியாருக்கு மலர் அபிஷேகம் நடைபெற்றது. அமெரிக்கா, ஜெர்மன், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். உள்ளூரைச் சேர்ந்த மக்கள் குறைவாகவே கலந்துகொண்டனர்.

இந்தச் சாமியாரின் பிறந்தநாள் விழா என்ன அவ்வளவு முக்கியமானதா என்று கேள்வி எழுப்பும் ஒருதரப்பினர், ‘‘ஆளுநர்கள் கலந்து கொள்ளட்டும். அவரவர் விருப்பம். ஆனால், ஆளுநர்கள் எப்போது... எந்த நேரத்தில் வருகிறார்கள் என்கிற சரியான நேரம் குறித்த தகவல் கூட, வேலூர் மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால், வேலூர் நகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வரை நேற்று மதியம் (2-ம் தேதி) முதலே, 10 அடிக்கு ஒரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர். இரவு 10 மணியாகியும் பெண் போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தனியாக நின்றபடி சோர்ந்து காணப்பட்டனர். அதன்பிறகு பெண் போலீஸார் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், ‘கடமை’ என்ற ஒன்றிற்காகவே ஆண் போலீஸார் கொட்டும் பனி, குளிரில் நடுங்கியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாமியார்

ஒரு சாமியாருக்காக இவ்வளவு பில்டப்பா... ஆளுநர், மத்திய-மாநில அமைச்சர்கள் பலர், இங்கு வந்து சக்தி அம்மா சாமியாரை வணங்குவது அரசியல் லாபத்துக்காக என்று எண்ணத் தோன்றுகிறது. நேற்று மதியத்துக்கு மேல், ஆளுநர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஒவ்வொரு ஆளுநரும் நினைத்த நேரத்தில் கிளம்புவதற்கு முன்கூட்டியே ஸ்ரீபுரம் கோயில் வழித்தடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதோ ஒரு ஆளுநர் வருகிறார்... அதோ இன்னொரு ஆளுநர் வரார்... மற்றொரு ஆளுநர் வந்துகொண்டே இருக்கிறார்... என்று நேரம் கடத்தியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.