திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் - சர்ச்சையில் இந்து அமைப்பினர்! | Government school students attends hindu munnani protest at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (04/01/2019)

கடைசி தொடர்பு:08:30 (04/01/2019)

திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் - சர்ச்சையில் இந்து அமைப்பினர்!

சபரிமலைக்கு பெண்கள் சென்றதைக் கண்டித்தும், அதற்கு காரணமான கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அரசுப் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக சர்ச்சை வெடித்துள்ளது.

சபரிமலை


நேற்றைய தினம் கேரள மாநிலம் சபரிமலைக்கு இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதைக் கண்டித்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பு சார்பாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்கும் கம்யூனிஸ்ட் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.


இந்த நிலையில், இன்றைய இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு அரசுப் பள்ளி மாணவர்களை அந்த அமைப்பினர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்து வந்ததாகவும், மதநல்லிணக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய மாணவர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை விதைப்பது பிரிவினையை ஏற்படுத்தும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் இதை எப்படி அனுமதித்தது என்றும் கேள்வியெழுப்பி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.