புதுக்கோட்டை மேலக்கரும்பிரானில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு! | Madurai high court permit for Jallikattu in Pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:09:00 (04/01/2019)

புதுக்கோட்டை மேலக்கரும்பிரானில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் மேலக்கரும்பிரான் கிராமத்தில் ஜனவரி 16-ம் தேதி நடக்க இருக்கும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை

புதுக்கோட்டை மாவட்டம் மேலக்கரும்பிரான் கோட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, ``எங்களது கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கலுக்கு இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் அன்று கோவில் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழாவில் `மஞ்சுவிரட்டு' போட்டி நடத்தப்படும். மஞ்சுவிரட்டுப் போட்டி பல ஆண்டுகளாக பாரம்பர்யமாக நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் தடைக்குப்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக மஞ்சுவிரட்டுப் போட்டிக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, எங்கள் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படவில்லை.

தற்போது தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தாண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். அரசு இதழில் எங்களது கிராமத்தின் பெயர் இடம்பெற்றால்தான் மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்த முடியும் என கூறி மனுவை நிராகரித்தார். இந்த நிலையில் 2019, ஜனவரி 16-ம் தேதி அன்று, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் அரசு வகுத்துள்ள விதிகளின்படி மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மஞ்சுவிரட்டுப் போட்டிக்கு அனுமதி அளித்ததுடன், உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு விதித்துள்ள சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.