வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (04/01/2019)

கடைசி தொடர்பு:09:30 (04/01/2019)

`சூதாட்டம், விபசாரத்தை தடுக்காவிட்டால் குண்டுவெடிக்கும்!' - அரசுப் பள்ளிக்கு வந்த அதிர்ச்சிக் கடிதம்

திருப்பூரில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், மண்ணரை என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பவதியம்மாள் நினைவு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு நேற்று ஒரு மர்மக் கடிதம் ஒன்று சென்றிருக்கிறது. அதில், ``மண்ணரைப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வணிக வளாகத்தில் காவல்துறையின் ஆதரவோடு ஒரு நம்பர் லாட்டரி மற்றும் வெட்டாட்டம் ஆகிய சூதாட்டங்கள் படுஜோராக நடைபெறுகின்றன. மேலும் கஞ்சா விற்பனை, விபசாரம் உள்ளிட்டவையும் அமோகமாக நடைபெறுகின்றன. அத்துடன் சூதாட வரும் நபர்களின் வாகனங்களும் திருடு போகின்றன. சமீபத்தில் அங்கு சூதாடுவதற்குச் சென்று பணத்தை இழந்த மகேஷ் என்பவர் வீட்டில் பிரச்னையாகி தற்கொலையே செய்துகொண்டார்.


இந்தச் சூதாடும் இடத்தால் இப்பகுதியில் வசிக்கும் மக்களும் நாளுக்கு நாள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குப் பலமுறை கைப்பேசி வாயிலாகவும், தபால் மூலமாகவும் தகவல் கொடுத்திருக்கிறோம். ஆனால், காவல்துறையில் இருந்தே சிலர் எங்களை மிரட்டி வருகிறார்கள். காவல்துறையின் முழு ஆதரவோடு இயங்கிவரும் அந்த சட்டவிரோத சூதாடும் இடத்தை, அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மூடவில்லை என்றால், அதே மண்ணரைப் பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் வெடி வைத்துத் தகர்த்துவிடுவோம். இதையே இறுதி எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று எழுதியிருந்தது. 

ஷாகுல் அமீது என்கிற பெயரில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்படவே, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரும், சில ஆசிரியர்களும் இன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் கடிதம் குறித்து புகார் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

தனியார் வணிக வளாகத்தில் நிகழும் பிரச்னைக்காக அரசுப் பள்ளியை குறிவைத்து மர்ம நபர் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.