வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (04/01/2019)

கடைசி தொடர்பு:10:40 (04/01/2019)

மனுக்கள் வழங்கியவுடன் உடனடி நடவடிக்கை - மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளித்தவுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றி மாற்றுத்திறனாளிகளை நெகிழச் செய்திருக்கிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.


 
 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஆட்சியர் அன்பழகன்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று (03.01.2019) நடைபெற்றது.


 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஆட்சியர் அன்பழகன்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,`மாற்றுத்திறனாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சக மனிதர்களுக்கு இணையாக வாழ வழிசெய்யும் வகையில் அவர்களுக்குத் தேவையான செயற்கைகால், காதொலிக்கருவிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் எனப் பல்வேறு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.


 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஆட்சியர் அன்பழகன்..

மேலும், இம்முகாமில் சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாத உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டுமனை பட்டா என மொத்தம் 27 மனுக்கள் பெறப்பட்டன. உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான உபகரணங்களை வழங்கிடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 2 பயனாளிக்கு ரூ.60,400 மதிப்பிலான நவீன செயற்கைகால், 2 பயனாளிகளுக்கு ரூ.1,660 மதிப்பிலான தாங்கு கட்டைகளும் (ஊன்றுகோல்), 2 பயனாளிக்கு ரூ.4,920 மதிப்பிலான காதொலி கருவியும், 1 பயனாளிக்கு ரூ.5,910 மதிப்பிலான சக்கர நாற்காலியும் உடனடியாக வரவழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது. தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் மிகுந்த நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டனர்.