வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (04/01/2019)

கடைசி தொடர்பு:10:54 (04/01/2019)

``அவரின் கண்ணீர் அல்லவா என் உடல் மீது படவேண்டும் என்று நினைத்தேன்!''- துரைமுருகன் உருக்கம்

``சென்னைக்கு தகரப்பெட்டியுடன் வந்த என்னை ஆளாக்கி அழகு பார்த்தவர் தலைவர்'' என்று கருணாநிதி குறித்து பேசிய துரைமுருகன் சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுதார். 

கருணாநிதி மறைவு குறித்து துரைமுருகன் உருக்கம்

தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குச் சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் கூட்டத்தில் பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் , `` சென்னைக்குத் தகரப்பெட்டியுடன் வந்தேன். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கத்தான் சென்னை வந்தேன். அண்ணா மேம்பாலம் வழியாகத் தகரப்பெட்டியை தலையில் வைத்து நடந்து சென்று கொண்டிருந்தேன். சென்னை எனக்குப் புதிது என்பதால் வழி கேட்டு கேட்டு நடந்தே பச்சையப்பா கல்லூரியைச் சென்றடைந்தேன். அப்படித் தகரப்பெட்டியுடன் சென்னை வந்த என்னை ஆளாக்கி அழகு பார்த்தவர் கருணாநிதி. நான் என்ன சாதி என்று பார்க்கவில்லை. ஏழையா, பணக்காரனா என்று அவருக்குத் தெரியாது. ஆனால், 15 ஆண்டுக்காலம் என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் என் தலைவர். 

ஸ்டாலினுடன் துரைமுருகன்

எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. கடந்த 2007-ம் ஆண்டே அது நிறைவேறியிருக்க வேண்டும். மேஜர் ஆபரேஷன் ஒன்று எனக்கு நடந்தது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவு தலைவர் என்னை அழைத்தார். `துரை. பயப்படாதே... உறங்கி விட்டாயா...! என்று அக்கறையுடன் கேட்டார். நீ ஒரு கோழை என்று எனக்குத் தெரியும். நான் வந்து உன்னை அறுவை சிகிச்சை அரங்குக்கு அனுப்பி வைக்கவா என்று பாசத்துடன் கூறினார். அப்போதே நான் இறந்து போயிருந்தால் என் தலைவரின் கண்ணீர் என் உடல் மீது பட்டிருக்கும். அந்த கொடுப்பினை எனக்கு இல்லை. என் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது'' என்று பேசியவாறே கண்ணீர் விட்டு அழுதார். 

அப்போது, அருகில் அமர்ந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் துரைமுருகனை தேற்றினார். துரைமுருகனின் பேச்சைக் கேட்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-க்கள் பலரின் கண்கள் குளமாகின. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க