வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (04/01/2019)

கடைசி தொடர்பு:13:25 (04/01/2019)

``ஐயப்பனுக்குப் பதில் குழந்தைகளுக்காக பெண்கள் சுவர் எழுப்பலாமே''- தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்

பரிமலை சந்நிதானத்தில் முதல் முறையாக நுழைந்த இரண்டு பெண்கள்; சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முயன்றுகொண்டிருக்கும் கேரள அரசுக்கு ஆதரவாகப் பெண்கள் சுவர் என்று பெண்ணியவாதிகள் முழுமூச்சில் தங்களுக்கான உரிமைக்கான வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி, பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் கலைச்செல்வியிடம் பேசினோம். 

கலைச்செல்வி

``நம் நாட்டில் பல மதங்கள், பல சாதிகள், பல வழிபாடுகள் இருக்கின்றன. இதில் ஒருவருடைய மத வழிபாட்டிலோ, நம்பிக்கையிலோ இன்னொருவர் தலையிட்டால் சபரிமலையில் தற்போது நடப்பதுபோல, பிரச்னைகள்தான் வரும். மக்களிடையே, மாநிலங்களிடையே இருக்கிற ஒற்றுமையைக் கலைக்க யாரோ சிலர் செய்கிற முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். சபரிமலைக்குப் போவது, போகாமல் இருப்பது அவரவர் சொந்த விருப்பம். ஆனால், அதற்காக ஒரு மாநிலத்தின் அமைதியைக் கெடுப்பது  சரியே கிடையாது. 

பெண்கள் சுவர் - ஐயப்பனை தரிசித்தப் பெண்கள்

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்காக `பெண்கள் சுவர்' நிகழ்ச்சிக்குப் பதில், இந்தியாவில் நடக்கிற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மனிதச் சங்கிலி அமைக்கலாமே... ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் உட்கார்ந்ததுபோல, பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். அதற்கான கடுமையான சட்டங்களை இயற்றுங்கள் என்று போராடினால்,  நம் நாட்டுக் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்குமே. 

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சட்டம் வந்தவுடன் வாழையிலைக்கும் மந்தாரை இலைக்கும் மாறத் தெரிந்த சமூகம் இது. குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு சட்டம் போட்டாலும் கட்டுப்படும். இன்றைக்கு இதற்காகத்தான் போராட வேண்டுமே ஒழிய, ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்காகப் போராட வேண்டிய அவசியமே இல்லை. அது பெண்ணியமும் இல்லை''  என்றார்.