` ஆர்.கே.நகரை மனதில் வைத்து சதி செய்கிறார்கள்!'  - திருவாரூர் வெற்றிக் கணக்கை ஆராய்ந்த ஸ்டாலின் | M.k.Stalin strategy on thiruvarur byelection

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (04/01/2019)

கடைசி தொடர்பு:13:32 (04/01/2019)

` ஆர்.கே.நகரை மனதில் வைத்து சதி செய்கிறார்கள்!'  - திருவாரூர் வெற்றிக் கணக்கை ஆராய்ந்த ஸ்டாலின்

இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதேநேரம், அதிக லீடிங்கில் வெற்றி பெற முடியாது என்பதையும் அறிவோம்.

` ஆர்.கே.நகரை மனதில் வைத்து சதி செய்கிறார்கள்!'  - திருவாரூர் வெற்றிக் கணக்கை ஆராய்ந்த ஸ்டாலின்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று நடக்கவிருந்த அ.தி.மு.க ஆட்சி மன்றக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. `யார் வேட்பாளர் என்பதைத் தாண்டி தொகுதிக்குள் சமூகரீதியான பலத்தை ஆராயத் தொடங்கியுள்ளன தி.மு.க-வும் அ.தி.மு.க-வும். மோடியின் கணக்கைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் வியூகம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1,27,500 ஆண் வாக்காளர்களும் 1,31,169 பெண் வாக்காளர்களும் 18 திருநங்கைகளும் உள்ளனர். மொத்தம் 2,58,687 வாக்காளர்களில் ஆண்களைவிட 3,669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். ஆர்.கே.நகரைத் தொடர்ந்து திருவாரூரிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரது கட்சி சார்பாக திருவாரூர் மா.செ எஸ்.காமராஜ் நிறுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக தேர்தல் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் காமராஜ். அ.தி.மு.க தரப்பிலோ யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. 

எடப்பாடி பழனிசாமி

` திருவாரூர் தொகுதியில் தினகரனைக் காலி செய்ய வேண்டும் என்றால், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளரைப் போட வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கருத்தில் உடன்படாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `முக்குலத்தோர் வாக்குகள் பிரிவது வெற்றியைக் கொடுக்காது. எனவே, தொகுதிக்குள் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராகப் போட்டால் அது ஸ்டாலினுக்கு எதிரான வியூகமாக இருக்கும். கருணாநிதியின் சொந்தத் தொகுதியாக இருப்பதால், அந்த சமூகத்து வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும்' என நினைக்கிறார். `` முதல்வர் இப்படிச் சொல்வதற்குக் காரணம், தொகுதியில் சசிகலாவின் சொந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தினகரன் நிறுத்தும் வேட்பாளருக்குத்தான் ஓட்டு போடுவார்கள். அந்தத் தொகுதியில் 9 சதவிகிதம் அளவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. இதில், சசிகலா சமூகத்துக்குக் குறைவான வாக்குகளே உள்ளன. இதை மனதில் வைத்துத்தான் வேட்பாளர் தேர்வில் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தினகரன்

அதேசமயம், திருவாரூர் தொகுதியில் உறுதியாக வெற்றி பெற்றுவிடுவோம் என நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். இதைப் பற்றி நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதேநேரம், அதிக லீடிங்கில் வெற்றி பெற முடியாது என்பதையும் அறிவோம். தொகுதியில் தி.மு.க அணிக்கு 65 சதவிகித வாக்குகள் உள்ளன. ஆர்.கே.நகரைப் போல திருவாரூரிலும் ஸ்டாலின் டெபாசிட் இழப்பார் என நம்புகிறார் மோடி. `இந்தத் தேர்தலே பா.ஜ.க செய்கின்ற சதிதான்' என்பதை ஸ்டாலின் அறிவார். அந்தச் சதியை முறியடித்து வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தி.மு.க கூட்டம்

இந்தத் தேர்தலில் மோடி எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க பக்கம் கொண்டு வரும் வேலையில் கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸும் முனைப்புடன் செயல்படத் தொடங்கிவிட்டன. ஆர்.கே.நகர் ரிசல்ட்டுக்குப் பிறகும் கூட்டணிக் கட்சிகள் எதுவும் ஸ்டாலினை விட்டு விலகவில்லை. அவர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் உறுதியாக நிற்கின்றனர். இந்தக் கட்சிகளின் அடிப்படை வாக்குகள் எதுவும் அ.தி.மு.கவுக்கோ தினகரனுக்கோ செல்லப் போவதில்லை. கருணாநிதி வென்ற தொகுதியை, ஸ்டாலின் தக்கவைத்துக் கொள்வார்" என்றார்.