வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:15:00 (04/01/2019)

``கம்யூனிஸ்ட் கொடிக் கம்பங்களைச் சாய்த்த விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பினர்!" - கோவையில் பதற்றம்

கம்யூனிஸ்ட் கொடி எரிப்பு

கோவையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டிச் சாய்த்து கொடிக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதல் பற்றி எரிகிறது சபரிமலை விவகாரம். பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு இயக்கங்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்றாலும், இந்து மத பற்றாளர்கள் இதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கேரள மாநிலத்தில் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, மகளிர் சுவர் (வனிதா மதில்) இயக்கம் நடைபெற்றது. அது உலக அளவிலான கவனத்தை ஈர்த்ததையடுத்து, இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்தனர். இதனால், கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை இந்து அமைப்புகள் அடித்து நொறுக்கினார்கள். கேரளம் கலவர பூமியாக மாறியுள்ள சூழலில், கோவையிலும் அப்படியான வன்முறைச் சம்பவங்களுக்கு அடிகோலும் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

கோவை வரதராஜபுரம் பகுதியில் இரண்டு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களையும் வெட்டிச் சாய்த்ததுடன் மட்டுமல்லாமல் கட்சிக் கொடியை எரித்து, விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.  

வன்முறையில் ஈடுபட்டவர்களில் இருவரை துரத்திப் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களை சிங்காநல்லூர் போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கோவை வரதராஜபுரம் பகுதியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் இந்துத்துவ அமைப்புகளின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.