வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (04/01/2019)

கடைசி தொடர்பு:15:56 (04/01/2019)

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்! - அ.ம.மு.க வேட்பாளரை அறிவித்தார் தினகரன்

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று அறிவித்துள்ளார்.

தினகரன்

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28-ம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அ.ம.மு.க, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். திருவாரூர் தொகுதியின் வெற்றி அடுத்து வர இருக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதால் இந்தத் தேர்தல் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தங்கத் தமிழ் செல்வனுடன் தினகரன்

இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என அ.ம.மு.க-வினர் கருணாநிதி இறந்த சில தினங்களிலேயே குக்கர் சின்னத்தை சுவர் விளம்பரம் செய்வது, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளைச் செய்து  வந்தனர். பின்னர் தி.மு.க, அ.தி.மு.க-வும் பணியைத் தொடங்கினர். இந்த நிலையில், வரும் 28-ம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அ.ம.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பெங்களூரு சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை செய்தார். பின்னர் போட்டியிடப் போகும் வேட்பாளரை அறிவிப்பதற்காக நேற்று இரவு 10 மணியளவில் தஞ்சாவூர் வந்தவர் சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளர் காமராஜ்

டெல்லியை கலங்கடித்த டெல்டா சிங்கமே, ஆலமரமே, இரண்டு முதல்வர்களின் தொகுதியை வெல்லப்போகும் வருங்கால முதல்வரே என நிர்வாகிகள் ஃப்ளெக்ஸ் வைத்து வரவேற்பு கொடுத்திருந்தனர். இன்று காலை 9 மணியிலிருந்தே வேட்பாளர் யார் என தெரிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்புடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் மீடியாக்கள் ஹோட்டல் முன்பு திரண்டனர். காலை 10.30 முதல் 12.30 மணி வரை ராகு காலம் என்பதால் அதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து வெளியே வந்த தினகரன் பின்னர் காவேரி திருமண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய தினகரன், திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராக எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் முதல் வேட்பாளராகத் தங்க.தமிழ்செல்வனையும் டம்மி வேட்பாளராக எஸ்.காமராஜையும் தினகரன் அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. காரணம், தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் மனு இதில் நிராகரிக்கப்படுகிறதா என்பதை பார்ப்பதற்கான பரிசோதனை முயற்சியாகவே இதை தினகரன் பார்க்கிறார் என்றும் தங்க.தமிழ்ச்செல்வன் மனு நிராகரிக்கப்படவில்லை என்றால் அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் தேர்தல் வரும்போது தகுதி நீக்கம் செய்யபட்டவர்களேயே வேட்பாளராக நிறுத்துவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க