வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (04/01/2019)

கடைசி தொடர்பு:12:57 (05/01/2019)

`குடும்பத்துக்காகவா...ஸ்டாலினுக்காகவா?!' - சமாதான தூது முயற்சியால் கொந்தளித்த அழகிரி

இந்த முறை தி.மு.க-வுக்கு கடுமையான நெருக்கடிகளை ஆளும்கட்சி தரும். அப்பா வென்ற தொகுதியில் நாம் தோற்றுவிட்டால், அது நம்மீது மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிடும்.

`குடும்பத்துக்காகவா...ஸ்டாலினுக்காகவா?!' - சமாதான தூது முயற்சியால் கொந்தளித்த அழகிரி

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மு.க.அழகிரி தரப்பிலிருந்து எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. `அப்பா வென்ற தொகுதியில் தி.மு.க தோல்வியடைந்தால், அது மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். எனவே, தேர்தலில் போட்டியிட வேண்டாம்' என அழகிரிக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர் குடும்ப உறுப்பினர்கள்.

அழகிரி 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, `மீண்டும் தி.மு.க-வில் இணைவார் அழகிரி' என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர்.  ஆனால், அவரை கட்சிக்குள் சேர்க்காமல் ஒதுக்கிவிட்டார் ஸ்டாலின். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் ஸ்டாலினிடம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தன. `கருணாநிதி எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். மீண்டும் அவரை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை' எனத் தெளிவுபடுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த அழகிரி, கடந்த ஆண்டு செப்.5-ம் தேதி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார்.

அழகிரி

இதன்பின்னர், திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியையும் நடத்தினார். `திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஸ்டாலினைத் தோற்கடிக்கும் வகையில் வியூகம் அமைப்பார் அழகிரி' என அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதன் ஒருகட்டமாக, திருவாரூரில் உள்ள பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்கும் அவர் சென்றுவந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக திருவாரூரில் போட்டியிடுவது தொடர்பாக அழகிரி தரப்பினர் விவாதித்துவருகின்றனர். இதில், துரை தயாநிதியை வேட்பாளராக நிறுத்தவும் சிலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 

அழகிரி

அழகிரி குடும்பத்துக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அறிந்து, அதிர்ச்சியில் உள்ளனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள். `இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அழகிரி ஒதுங்கியிருப்பதே நல்லது' என குடும்பத்தினர் மத்தியிலும் விவாதம் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று அழகிரியிடம் பேசியிருக்கிறார் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர். அவர் பேசும்போது, ` தேர்தலில் போட்டியிட வேண்டாம். ஆளும்கட்சி தரப்பில் ஒவ்வொரு சாதிச் சங்கத் தலைவர்களையும் ஒவ்வொரு சாதி அமைச்சர்களையும் களமிறக்கி நமக்கு நெருக்கடி கொடுக்க இருக்கிறார்கள். நீங்கள் போட்டியிட்டால், அது தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை பாதித்துவிடும். குடும்பத்துக்கும் தேவையில்லாத சிரமம் ஏற்படும். இடைத்தேர்தலை நாம் எதிர்பார்க்கவில்லை' எனக் கூற, 

அழகிரி

` என்ன சொல்ல வருகிறாய்?' என அழகிரி கேட்டிருக்கிறார். இதன்பின்னர், தொடர்ந்து பேசிய அந்த உறுப்பினர், ` திருவாரூர் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு தி.மு.க-வுக்கு இருக்காது என நினைத்துக்கொண்டு, தங்கமணியும் வேலுமணியும் மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் பார்த்துவிட்டுத் தேர்தலை சந்திக்க வருகிறார்கள். இந்தத் தேர்தலில், குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயை செலவழிக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆளும்கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த முறை தி.மு.க-வுக்கு கடுமையான நெருக்கடிகளை ஆளும்கட்சி தரும். அப்பா வென்ற தொகுதியில் நாம் தோற்றுவிட்டால், அது நம்மீது மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிடும்' எனப் பொறுமையாக விளக்கியிருக்கிறார். 

ஸ்டாலின்

இதற்குப் பதில் அளித்த அழகிரி, ` ஆர்.கே.நகர் தேர்தலில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் உனக்கு அழைப்புவிடுத்தாரா. அன்று உன்னையும் சேர்த்துத்தான் அவர் அவமானப்படுத்தினார். நீ சொன்ன நபருக்கு அவர் சீட் கொடுத்தாரா... உன்னையே அவர்கள் ஏமாற்றப்பார்க்கிறார்கள். அவர் சொன்னார் என என்னிடம் வந்து பேசுகிறாயா. கட்சியை வழிநடத்த அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?' என கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த அந்த குடும்ப உறுப்பினர், `நீங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது, அவ்வளவுதான்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  அதன்பின்னர் தொடர்ந்து பேசிய அழகிரி, ` எனக்குக் கிடைத்துள்ள இந்தப் பிடியை விட்டுவிட்டால் எனக்கு என்ன பயன். நீ சொல்லும் வார்த்தைகளை எல்லாம் ஸ்டாலின் மதிக்க மாட்டார். குடும்பத்துக்காக பேசுகிறாயா...ஸ்டாலினுக்காகப் பேசுகிறாயா' எனச் சாடியிருக்கிறார்.

` குடும்ப உறுப்பினரின் கோரிக்கைக்கு அழகிரி செவிசாய்ப்பாரா என்பது அடுத்த சில நாள்களில் தெரிந்துவிடும்' என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.