`குழந்தையை எப்படியாவது காப்பாற்றியிருப்போமே!'- ஆம்புலன்ஸ் இல்லாததால் கதறிய பெற்றோர் | Kanchipuram infant died of negligence of government doctors, alleges parents

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/01/2019)

கடைசி தொடர்பு:19:46 (04/01/2019)

`குழந்தையை எப்படியாவது காப்பாற்றியிருப்போமே!'- ஆம்புலன்ஸ் இல்லாததால் கதறிய பெற்றோர்

சாத்தூர் கர்ப்பிணிப் பெண் விவகாரத்தில் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அனலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில்... காஞ்சிபுரத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தை ஒன்று மரணத்தைத் தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை

காஞ்சிபுரம் மாவட்டம், கடும்பாடியைச் சேர்ந்த சௌந்தர்யா-ருத்ரகோடி தம்பதிக்கு நீண்ட காலமாகக் குழந்தைகள் இல்லை. கடந்த ஆண்டு கர்ப்பமான சௌந்தர்யா, பிரசவத்துக்காக சதுரங்கப்பட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையின் முதல் கழிவு, நுரையிரலில் புகுந்தது  காரணமாக அந்தக் குழந்தை இறந்துவிட்டது. `குழந்தை பிறக்கும் முன்னரே முதல் கழிவு, நுரையிரலில் புகுந்தது கண்டறியப்படவில்லை' என்றும் `குழந்தை பிறந்த பிறகு முதல் கழிவு, நுரையிரலில் புகுந்து இருந்த விஷயத்தைப் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறவில்லை' எனவும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். “ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தபோது, முதன் முதலில் வெளியேறிய கழிவானது நுரையீரலில் புகுந்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி இருதயம் வேலை செய்யாமல் இறப்பு ஏற்பட்டதாக இறப்புச் சான்றிதழில் பதிவுசெய்துள்ளனர்.  இதில் பிரச்னை என்னவென்றால், இந்தச் சிக்கல் குழந்தைக்கு ஏற்படலாம் என்பதை மருத்துவர்கள் முன்கூட்டியே சோதனை செய்யவில்லை. இதனை முன்னரே அறிந்திருந்தால், தாயை செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். மேலும், குழந்தை பிறந்தது மாலை 5.45  மணி எனக் கூறுகிறார்கள். அதன்பின் குழந்தையை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றபோதும், சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் உடனடியாக அனுப்ப முடியவில்லை. நோய்க் குறிப்பு சீட்டில் குழந்தை பிறந்த நேரம்,  எடை போன்ற எந்த விவரமும் பதிவு செய்யப்படவில்லை.  

மருத்துவர் புகழேந்தி

`தாய்- சேய் இணைப்பு கொடி (PLACENTA) சரிவர செயல்படாமல் இருப்பது, பனிக்குட  நீர் குறைவாக இருப்பது, தாய்க்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பது, தாய்- சேய் இணைப்புக் கொடியில் (PLACENTA) நோய்த் தொற்று, மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போன்றவற்றால்தான் குழந்தையின் கழிவு கருப்பையிலேயே வெளிவரும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியிருக்க, இவற்றில் எது குழந்தை உயிரிழப்புக்குக் காரணம் என இதுவரை யாரும் கூறவில்லை. தாய்க்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து, அதன் அளவு போன்ற எதுவும் நோய்க் குறிப்பு சீட்டில் பதிவுசெய்யப்படவில்லை. மேலும், குழந்தை பிறந்தவுடன் அழாமல் இருந்துள்ளதால், பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்கும்போது, அவர்கள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை.  குழந்தை இரவு 7.05 மணிக்கு இறந்ததாக இறப்புச் சீட்டில் குறிபிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே குழந்தை இறந்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பயந்து, காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்காமல் இருந்துள்ளனர். குழந்தை உயிரிழப்பதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம். புதைக்கப்பட்டது குழந்தை மட்டுமல்ல, அது இறந்ததுக்கான காரணமும்தான்" என்றார் வேதனையோடு. 

`` குழந்தைக்கு இருக்கும் பிரச்னையை எங்களுக்கு தெரிவித்திருந்தால், எங்களால் முடிந்ததைச் செய்தாவது குழந்தையைக் காப்பாற்றி இருப்போமே" எனக் கதறுகின்றனர் சௌந்தர்யாவின் உறவினர்கள்.