வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (04/01/2019)

‘மனமிருந்தால் மார்க்கமுண்டு; ஆனால் பணமிருந்தால்..?” - பேரவையில் ஸ்டாலின் சீற்றம்

ஸ்டாலின்


தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின், “திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கின்ற காரணத்தால் விவசாயிகள் கடந்தாண்டு மே மாதத்திலிருந்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.  

பவர் கிரிட் நிறுவனமும் தமிழ்நோடு மின் தொடரமைப்பு கழகமும் விவசாயிகளிடத்தில் கேட்காமல் உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏற்கெனவே 13 மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் போராடக்கூடிய நிலை வந்திருக்கிறது. 

விவசாயிகள் போராட்டம்

சென்னையில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்த அரசு கைது செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று காலை சந்தித்தேன். பெண்கள் என்றுகூட பாராமல் அவர்களை இரவில் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறிய செயலாக அமைந்திருக்கிறது. எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

போராட்டம்

நேற்றைய தினம் மின்துறை அமைச்சர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. இந்தத் திட்டத்தை பூமிக்கடியில் கேபிள் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கேபிள் வழியாக மின் தடங்களைக் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று மின்துறை அமைச்சர் சொல்லலாம். அண்டை மாநிலமான கேரளாவில் கேபிள் வழியாக அங்கே மின் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறோம் என்பது தான் என் கேள்வி.

திமுக தலைவர்

மனமிருந்தால் மார்க்கமுண்டு, ஆனால் நீங்கள் பணமிருந்தால்… என்பது போலதான் சொல்லுவீர்கள். முதலமைச்சரையும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைச்சரையும் நான் கேட்டுக்கொள்வது, இந்தப் பணிகளையெல்லாம் உடனடியாக நிறுத்தி, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளை அழைத்துப்பேசி ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். 

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தேசிய மயமாக்கப்பட்டிருக்கக்கூடிய வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடனை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசு தள்ளுபடி செய்வதற்கு முன்வர வேண்டும்” என்று பேசினார்.