`நாங்க வீட்டுக்குப் போகணும்!’ - அமைச்சர்களுக்காகக் காத்திருந்த மாணவிகள் குமுறல் | TN Ministers make school students for hours ire controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (04/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (04/01/2019)

`நாங்க வீட்டுக்குப் போகணும்!’ - அமைச்சர்களுக்காகக் காத்திருந்த மாணவிகள் குமுறல்

மாணவிகள்

சென்னை முகப்பேர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழாவில் பங்கேற்க 4 அமைச்சர்கள் வர தாமதமாகினர். இதனால் ஸ்கூல் டைம் முடிந்த பிறகும் மாணவிகள் காத்திருந்தனர்.

சென்னை முகப்பேரில் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைஅரங்கம் திறப்பு விழா, ஸ்மார்ட் வகுப்பறை, பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆகிய முப்பெரும் விழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பள்ளி வளாகத்தில் செய்யப்பட்டிருந்தன. 

விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், க.பாண்டியராஜன் மற்றும் ராமசந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்களை வரவேற்று மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ பேனர்களை வைத்திருந்தார். 
அமைச்சர்களை வரவேற்க மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், 5 மணி வரை அமைச்சர்கள் யாரும் வரவில்லை. எம்.பி.ராமசந்திரன் மட்டும் 3 மணியளவில் வந்தார். அமைச்சர்கள் வராததால் விழா தொடங்கப்படவில்லை. 

 

வழக்கமாக மாலை 4 மணியளவில் பள்ளி முடிவடையும். இன்றைக்கு பள்ளி முடிவடையும் நேரம் கடந்த பிறகும் மாணவிகள் யாரும் பள்ளியை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். அமைச்சர்கள் வருகையையொட்டி போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் வருகை தாமதமானதால் மாணவிகள் சோர்வடைந்தனர். இதனால் அமைச்சர்களை வரவேற்க விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்திலேயே சோர்வாக மாணவிகள் அமர்ந்தனர். பிற்பகல் 2 மணி தொடங்கி மூன்று மணி நேரத்துக்கு மேலாக மாணவிகள் காத்திருந்தனர். அவர்களுக்கு குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

நேரம் கடந்ததால் சில மாணவிகள், ஆசிரியர்களிடம் நாங்கள் வீட்டுக்குப் போகணும் என அடம்பிடித்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அமைச்சர்களுக்காக காத்திருக்க வைத்தனர். முகப்பேர் பள்ளி விழா முடிந்த பிறகு அம்பத்தூரில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியிலும் இன்று விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி மாணவிகளும் அமைச்சர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். அமைச்சர்கள் முக்கிய வேலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விழா எப்போது முடிந்து மாணவிகள் எந்தநேரத்தில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பள்ளி வளாகத்தில் மாணவிகள் சரியான நேரத்துக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு வைக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர்கள் மட்டும் ஏன் மணிக்கணக்கில் தாமதமாக வருகிறார்கள் என்று மாணவிகள் கமென்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது.

இதனிடையே, மாலை 5.30 மணி அளவில் விழா ரத்து செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு மாணவிகள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.