வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (04/01/2019)

`நீதிமன்றத்துக்குப் பதில் சொல்லியே ஆகணும்!' - அறப்போர் இயக்கம் காட்டம்

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு

மைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

2014 -2015-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் முறைகேடு செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டி இருந்தது. இதில், கே.சி.பி இன்ஜினீயர்ஸ் லிமிடெட், செந்தில் அன்ட் கோ, வரதன் இன்பராஸ்ட்ரெக்சர் கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு அமைச்சர் ஒப்பந்த விதிகளை மீறி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும் இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது.

அதுவும் குறிப்பாக, கே.சி.பி என்ற நிறுவனம், அமைச்சருக்கு நெருக்கமானவருடைய  நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ராஜன் சந்திரசேகர், மைச்சர் வேலுமணிக்கு நெருங்கியர் மட்டுமல்லாமல், கோவை மாவட்ட அ.தி.மு.க இளைஞர் அணி அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் `நமது அம்மா’ பத்திரிகையின் பப்பளிஷரும்கூட. இப்படி நெருக்கமானவருக்காகப் பலவகையிலும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என்றும் கூறியிருந்தது அறப்போர் இயக்கம். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் தெரிவித்திருந்தது. அந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தாதையடுத்து நீதிமன்றத்தை நாடியது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கம்

இது குறித்துப் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "அமைச்சர் வேலுமணியின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியிருந்தோம். ஆனால், அந்தப் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வேலுமணியின் நெருங்கியவருக்கு எவ்வாறு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன என்பதை விரிவாக எடுத்துரைத்தோம். அது தொடர்பான ஆவணங்களையும் காட்டினோம். இதையடுத்து நீதிமன்றமே தானாக முன்வந்து அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 23-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. எங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்லாத அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் இனி நீதிமன்றத்துக்குப் பதில் சொல்வார்கள்" என்றார்.