வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (04/01/2019)

கடைசி தொடர்பு:20:40 (04/01/2019)

‘சிட்டுக்குருவிகள் சாகும்... புற்றுநோய் வரும்!’- ஜியோ டவர் அமைக்க வேலூர் பெண்கள் எதிர்ப்பு

வேலூரில், ரிலையன்ஸ் ஜியோ டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரிலையன்ஸ்  ஜியோ டவர் -பெண்கள்

மொபைல் போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருவதாக, ரஜினியின் ‘2.O’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும். ‘செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது, டவர்களை அகற்ற வேண்டும்’ என்பதே ரஜினி படத்தின் மையக்கரு. இதே கருத்தை நிஜத்திலும் வலியுறுத்தி, ‘செல்போன் டவரை முற்றுகையிட்டுள்ளனர், வேலூரைச் சேர்ந்த பெண்கள்.

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம். இவரின் மனைவி சரளா (40). இவர்களின் வீட்டு மாடியில் ரிலையன்ஸ் ஜியோ டவர் அமைக்கப்பட்டுவருகிறது. இதையறிந்த அப்பகுதி பெண்கள், ‘‘செல்போன் டவர் அமைப்பதால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவிடும். கதிர்வீச்சால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் செல்போன் டவரை அமைக்கவே கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ டவர் -பெண்கள்

டவர் அமைக்க வீட்டு உரிமையாளர் சம்மதம் தெரிவித்ததால், பணிகள் தொடர்ந்தன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் இன்று ஒன்றுகூடி டவரை முற்றுகையிட்டு, டவர் அமைக்கும் பணியைத் தடுத்துநிறுத்தினர். இதுபற்றி தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீஸார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தரப்பினர், ‘நாங்கள் டவர் அமைக்க அனுமதிக்க வேண்டும்’ என்றுகூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெறப்பட்ட ஆணையைக் காண்பித்தனர். இதையடுத்து, போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் கலைந்துசென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.