வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (04/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (04/01/2019)

‘கஞ்சா செடின்னு எனக்குத் தெரியாது!'- போலீஸிடம் சிக்கிய வீட்டு ஓனர்

குடியாத்தத்தில், வீட்டு மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த நபரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கஞ்சா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி அவ்வை நகரைச் சேர்ந்தவர் பெல்லியப்பன் (45). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய வீட்டு மொட்டைமாடியில் கஞ்சா செடிகளைத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதாக குடியாத்தம் டவுன் போலீஸாருக்கு இன்று ரகசியத் தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ், மேலும் சில போலீஸார், பெல்லியப்பன் வீட்டுக்கு விரைந்துசென்றனர். மாடியில் நடத்திய சோதனையின்போது, தொட்டியில் மூன்று கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கஞ்சா பறிமுதல்

இதையடுத்து, கஞ்சா செடிகளைக் கைப்பற்றிய போலீஸார், பெல்லியப்பனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், ‘‘அது கஞ்சா செடி என்று எனக்குத் தெரியாது. பூச்செடி என்று நினைத்துதான் அந்த செடிகளை இதுநாள் வரை வளர்த்தேன். பூக்கள் வராததால், செடிகளை வெட்டி வெட்டிப் பெரியதாக வளர்த்தேன்’’ என்று தெரிவித்தார். இதுபற்றி உயரதிகாரிகளிடம் குடியாத்தம் போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பெல்லியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.