சிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்! -சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீஸார் | Kanchipuram police releases CCTV images related to Harini kidnapping case

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (04/01/2019)

கடைசி தொடர்பு:12:08 (08/01/2019)

சிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்! -சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீஸார்

காஞ்சிபுரம் ஹரிணி காணாமல்போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டக் காவல்துறை மர்மநபர் ஒருவரின் சிசிடிவி புட்டேஜில் கிடைத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. பாசி மணிகள் விற்கப்போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர்.

காளியம்மாள்,வெங்கடேசன்(ஹரிணி பெற்றோர்)

நடுராத்திரியில் ஹரிணி காணாமல்போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது. அதோடு, 'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இதற்கிடையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, 'ஹரிணியைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதைச் சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். 

ஹரிணி போட்டோவும்,ஹரிணி போல் மும்பையில் உள்ள குழந்தையில் போட்டோவும்...

 இந்தத் தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம் தொடர்ந்து செய்தியாகப் பதிந்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்தார்கள். இருந்தாலும் ஹரிணி பற்றி நம்பிக்கை தரும் எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையில், காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல்போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறி வந்தார்கள். `ஹரிணி கிடைக்கும்வரை நகரமாட்டோம்' என்று அணைக்கட்டு காவல்நிலையத்தின் முன்பே கதி என்று கிடந்த அந்தத் தம்பதி வேலைக்கும் போகாமல், சரியாகச் சாப்பிடாமல் அல்லாடி வந்தது. குறிப்பாக, காளியம்மாள் ஹரிணியை நினைத்து நினைத்து உள்ளம் குமுறியபடி, சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் அரற்றி வந்திருக்கிறார். இதனால், அவர் படுத்திருந்த வெக்காளியம்மன் கோயிலில் மயங்கி விழுந்திருக்கிறார். அவருக்கு 100 டிகிரியைத் தாண்டி கடும் ஜுரமும் ஏற்பட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துப்போய் சிகிச்சையளித்தார்கள். ``மருத்துவத்தால் ஒண்ணும் பண்ண முடியாது. ஹரிணிதான் அவருக்கு மருந்து" என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஹரிணியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்

இந்நிலையில்,நமது செய்தியைப் பார்த்துவிட்டு, காளியம்மாளையும் வெங்கடேசனையும் போனில் அழைத்து தைரியப்படுத்தினார் லதா ரஜினிகாந்த். அதோடு, மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது பீஸ் ஆப் சைல்டு அமைப்பு மூலம் முயல்வதாகவும் குறிப்பிட்டார். இதனால், சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டு காவல்நிலைய போலீஸாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி

ஹரிணி காணாமல்போன அன்று அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இருவர் இருந்தது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அவர்களின் படங்களை காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி இன்று வெளியிட்டுள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். “ஹரிணி கடத்தல் சம்பவம் நடந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பதிவான காட்சிகள் இவை. அவர்கள்தான் எங்களுக்குக் கிடைத்த ஒரு முக்கியமான க்ளூவாக நினைக்கிறோம். அவர்கள்தான் குழந்தையைக் கடத்தினார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால். அவர்கள் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதனால் அவர்களை விசாரித்தால் காணாமல் போன ஹரிணி பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஹரிணியைத்தேடி தனிப்படையினர் மும்பை சென்றுள்ளனர். விரைவில் ஹரிணியைக் கண்டுபிடித்துவிடுவோம்” என்கிறார்.

சாதிக் அலிஇதுபற்றி, நம்மிடம் பேசிய இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, ``விகடன் இணையதள செய்தியை இரண்டு மாதங்களாக லதா ரஜினிகாந்த் மேடம் தொடர்ந்து படிச்சுட்டு வந்திருக்காங்க. அதோடு, இரண்டு மாதங்களாகத் தன்னோட அமைப்பு மூலம் ரகசியமா ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்காங்க. `ஹரிணி சாயலில் இருக்கும் குழந்தைகள்' என்று கல்கத்தா, தர்மபுரின்னு பல இடங்களில் இருந்து கிடைத்த புகைப்பட ஆதாரங்களைத் தொடர்ந்து, அங்கெல்லாம் தனிப்படை சல்லடைபோட்டு தேடியது. எந்த முன்னேற்றமும் இல்லை. சில தினங்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த சிலர் ஹரிணி போல் இருக்கும் குழந்தை போட்டோவை அனுப்பினர். அது லதா ரஜினிகாந்த் மேடத்துக்கும் கிடைச்சுருக்கு. தனிப்படைக்கும் கிடைச்சிருக்கு. லதா ரஜினிகாந்த் மேடம் பாலிவுட் முக்கிய சினிமா புள்ளி மூலமா மும்பை கமிஷனிரிடம் பேசி, ஹரிணிபோல் உள்ள குழந்தையைப் பற்றி விசாரிக்க சொல்லி இருக்கிறார். ஹரிணி பெற்றோர்களிடம் காண்பிச்சப்ப, 'இது ஹரிணிதான்'ன்னு அடிச்சு சொன்னாங்க. எங்களுக்கும் அப்படித்தான் இருந்துச்சு. லதா ரஜினிகாந்த் மேடமும் அப்படித்தான் சொன்னாங்க. இதற்கிடையில், ஹரிணி காணாமல் போன அன்னைக்கு அணைக்கட்டு காவல்நிலையத்துக்கு அருகில் சிசிடிவி புட்டேஜில் சந்தேகத்துக்கிடமான மர்மநபர் ஒருவர் பதிவாகி இருக்கிறார். போலீஸார் அந்த நபர்தான் ஹரிணியைக் கடத்தியவர்னு சந்தேகப்படுறாங்க. அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறாங்க. இதற்கிடையில், தனிப்படை போலீஸார் மும்பைக்குப் போய், ஹரிணி பாப்பாவை மீட்க இருக்கிறார்கள். 'இரண்டு நாள்களில் நல்ல சேதி கிடைக்கும்'னு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சொல்லுது" என்றார் மகிழ்ச்சியாக.