ராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புது துறை திடீர் ரெய்டு! - தங்கக் காசு, வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் | Gold coins and silver coins seized in Ramanathapuram Siddha Medical Office

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (05/01/2019)

ராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புது துறை திடீர் ரெய்டு! - தங்கக் காசு, வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை. புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக அளிக்கப்பட்ட தங்கக்காசு, வெள்ளிக்கொலுசு உள்ளிட்டவை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை யில் கைபற்றப்பட்ட பொருட்கள்

ராமநாதபுரத்தில், மாவட்ட சித்த மருத்துவத்துறை அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில்  மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 22 சித்த மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றிவரும் பார்த்திபன், இன்று தனது அலுவலகத்தில் சித்த மருத்துவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சித்த மருத்துவர்கள், பார்த்திபனுக்கு புத்தாண்டுப் பரிசுகள் வழங்கி வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபன்


 இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், புலனாய்வு அலுவலர் ஷேக் மைதீன், ஆய்வாளர்கள் பீட்டர், வானதி தலைமையில் சித்த மருத்துவ அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், அரை பவுன் தங்கக் காசு, 5 வெள்ளி டம்ளர்கள், 2 வெள்ளிக்கொலுசுகள் உள்ளிட்டவை சிக்கின. இவற்றை சித்த மருத்துவர்கள் மாவட்ட அலுவலரான பார்த்திபனுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல்செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த திடீர் நடவடிக்கையால், ராமநாதபுரம் மருத்துவப் பணிகள் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.