வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:07:07 (05/01/2019)

`அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கொண்டுவரத் திட்டம்!’ - சைலேந்திர பாபு

கடந்த 2018-ல் மட்டும் ரயில்வே விபத்துகளில் மொத்தம் 2572 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தகவல் தெரிவித்திருக்கிறார்.

சைலேந்திர பாபு

ரயில் பயணத்தின்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது குறித்தும், ரயில்வே விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் திருப்பூர் ரயில்நிலையத்தில் இன்று விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு  ரயில்வே காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள `ரயில்வே ஹெல்ப்' என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார். மேலும், அந்த அப்ளிகேஷனை ரயில் பயணிகள் பயன்படுத்துவது குறித்தும் பார்வையாளர்களிடம் விரிவாக விளக்கிக் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``ரயில் பயணத்தின்போது நிகழக்கூடிய குற்றச் சம்பவங்கள் மற்றும் ரயில் விபத்துகளிலிருந்து பயணிகள் தங்களை தற்காத்துக்கொள்ளவே ரயில்வே காவல்துறையின் மூலமாக இந்த அப்ளிகேஷனை வெளியிட்டிருக்கிறோம். இதை ரயில் பயணிகள் தங்களுக்கு ஆபத்து நேரும் தருணங்களில் பயன்படுத்திக்கொண்டு உடனடியாக தகவல்களை அளிக்கலாம். ரயில்வே விபத்துகளைப் பொறுத்தவரையில் கடந்த 2018-ல் மட்டும் மொத்தம் 2,572 பேர் உயிரிழந்து போயிருக்கிறார்கள்.

ரயில் விபத்து

அதில் 600 சடலங்கள்வரை அடையாளம் கண்டறியப்படவில்லை. அதுபோலவே கடந்தாண்டு ரயில் நிலையங்களில் 2,242 குழந்தைகள்வரை மீட்கப்பட்டு,  அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும்,
தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும் நாங்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.