கடைகளில் குட்கா, பான் மசாலா விற்க தடை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு | Tamilnadu Government, jayalalitha, Gutkha, pan parag, ban

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (08/05/2013)

கடைசி தொடர்பு:12:10 (08/05/2013)

கடைகளில் குட்கா, பான் மசாலா விற்க தடை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு

சென்னை: புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110ன் கீழ்   முதல்வர் ஜெயலலிதா  இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம்  Prevention of Food Adulteration Act 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை  19.11.2001  முதல் ஐந்து ஆண்டுகளுக்கு  எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள் notifications, குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய  அரசுக்கு மட்டுமே  உள்ளதாக  கூறி,  2.8.2004-அன்று  அறிவிக்கையை ரத்து  செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் Food Safety and Standards Act என்ற புதிய சட்டத்தை 2006ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011  முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு  வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென `தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்’ என்ற தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின் கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக் கூடாது என்றும் புகையிலை, அதாவது Tobacco  மற்றும் நிக்கோட்டின் Nicotine ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது  குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப்  பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால்  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம்  கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்கும் வண்ணமும், அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அளிக்கும் வண்ணமும், என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஓர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்