வெளியிடப்பட்ட நேரம்: 22:33 (04/01/2019)

கடைசி தொடர்பு:07:17 (05/01/2019)

`அமைச்சரின் கருத்து மனவேதனை அளிக்கிறது!’ - ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுகாதாரத்துறை செயலருக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராதாகிருஷ்ணன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். 75 நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கூறி வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு
பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது அந்த ஆணையம் விசாரித்து வருகிறது. 

சி.வி.சண்முகம்

இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  `` மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆனால், அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் எனச் சொன்னது யார்? மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை  அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்’ என்றார்.சி.வி.சண்முகத்தின் இந்தக் கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆதரித்துப் பேசினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பேசிய விவகாரம் அவரது சொந்தக் கருத்து என முடித்துக்கொண்டார். 

ஜெயக்குமார்

இந்நிலையில் தான் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்,  பொதுவெளியில் அமைச்சர்கள் கூறும் இதுபோன்ற கருத்துகள் மனவேதனை அளிப்பதாகவும் இதைத் தடுக்கவேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், இந்தத் தீர்மானத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

தீர்மானம்
 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், `` சுகாதாரத்துறைச் செயலாளருக்கு எதிராக அமைச்சர் பொதுவெளியில் பேசியிருப்பது விசாரணை நடைமுறையைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஆஜராகி தேவையான விளக்கத்தை அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவத்துக்கு ஒரு அதிகாரி பொறுப்பாக முடியாது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவு செய்தது மருத்துவர்கள் தானே தவிரச் சுகாதாரத்துறைச் செயலாளருக்கு இதில் பங்கு இல்லை. மேலும், அதிகாரிகள் அமைச்சர்களுக்கும் சட்டசபைக்கு உட்பட்டுத் தான் செயல்படுகின்றனர். பொதுவெளியில்  அமைச்சர் இப்படிப் பேசுவது சட்ட நடைமுறையைப் பாதிக்கும்.

எடப்பாடி பழனிசாமி

அரசாங்கத்துக்குச் சேவை செய்யும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிரந்தர அரசு ஊழியர்கள். அவர்கள் இந்திய சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் பொது வெளியில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக அமைச்சர் குற்றம்சாட்டும் பொழுது, அதற்கு  எதிர் கருத்தோ அல்லது தனது தரப்பு விளக்கத்தையோ பொது வெளியில் தெரிவிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உரிமை இல்லாதநிலையில், அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது அரசாங்க நன்னடைத்தை விதிகளை மீறியது. அவ்வாறு அவர்கள் செயல்பட்டால் அது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையாகக் கருதப்படும். பொதுவெளியில் அமைச்சர்கள் கூறும் இதுபோன்ற கருத்துகள் மனவேதனை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.