வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:12:31 (08/01/2019)

குமரியில் கலவரக்காரர்களை தெறிக்கவிட்ட எஸ்.ஐ - குவியும் பாராட்டுகள்!

குமரி - கேரள எல்லையில் கேரள அரசுப் பேருந்தை தாக்க முயன்ற பா.ஜ.க-வினரை எதிர்த்து குரல்கொடுத்து பேருந்தைக் காப்பாற்றிய களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் சன்மானம் வழங்குவதாக கேரள அமைச்சர் அறிவித்துள்ளார். 

மோகன அய்யர்

சபரிமலை சந்நிதானத்தில் கடந்த 2-ம் தேதி இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வினர் கேரளம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். கடந்த 3-ம் தேதி முழு வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தினர். பந்த்தின்போது கேரளத்தில் 100-க்கும் அதிகமான பேருந்துகள் உடைக்கப்பட்டன. கேரளத்தில் நடந்த பா.ஜ.க-வினரின் போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவியது. சி.பி.எம். கொடிக் கம்பங்கள் உடைக்கப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன.

மோகன அய்யர்

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்தை தடுத்து சிலர் தாக்க முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் போராட்டக்காரர்களைப் பார்த்து பொங்கி எழுந்தார். மேலும், அவர் சிங்கம் சூர்யா ஸ்டைலில் ``பஸ்ஸை தொட்டுப்பாருங்க" என அதிரடியாக மிரட்டினார். இதையடுத்து, கேரள பேருந்தை தாக்காமல் பா.ஜ.க-வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பா.ஜ.க.வினரை எஸ்.ஐ. தெறிக்கவிட்ட சம்பவம் வலைதளங்களில் வைரலானது.

களியக்காவிளை

இந்த நிலையில், கேரள அரசுப் பேருந்தை தாக்குதலிலிருந்து காப்பாற்றிய எஸ்.ஐ. மோகன அய்யரை கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக எம்.டி. டோமின் தச்சங்கரி போனில் அழைத்து பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார். மேலும், எஸ்.ஐ. மோகன அய்யருக்கு கே.எஸ்.ஆர் டி.சி. நிறுவனம் 1000 ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.ஐ. மோகன அய்யர் கூறும்போது, ``கேரள அரசுப் பேருந்தை பாதுகாத்ததற்காக கே.எஸ்.ஆர்.டி.சி. எம்.டி. என்னிடம் நன்றி கூறினார். மேலும், கேரள போக்குவரத்துத் துறை அமைச்சரும் பேசினார். கேரள டி.ஜி.பி. மூலம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஆயிரம் ரூபாய்க்கான சன்மானம் வழங்குவதாக தெரிவித்தார்" என்றார். இதை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.